வேலை நிறுத்தத்தால் கடும் பாதிப்பு – தொழிலாளர்களுக்காக 10 லட்சம் கொடுத்த விஷால்!

டிஜிட்டல் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தமிழ்த்திரையுலகம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இதனால் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. மேலும், ஷூட்டிங், எடிட்டிங் உட்பட சினிமா சம்மந்தமான எந்த வேலைகளும் நடைபெறவில்லை!

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தபடி உள்ளது. ஆனால், உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை! இதனால், சினிமாவை நம்பியிருக்கும் 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தில் தவிக்கின்றனர்.

இந்த கடுமையான சூழலுக்கு மத்தியில் இணையதளம் ஒன்று நடத்திய விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார் நடிகர் விஷால். இதில் அந்த இணையதளம் சார்பில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.10 லட்சம் நன்கொடையாக கொடுக்கப்பட்டது. இதை கமல்ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவரும், நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் பெற்று கொண்டார்.

பின்னர் அதே மேடையில் அந்த தொகையை, ஃபெப்சி யூனியன் தொழிலாளர்களுக்காக நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார் விஷால். வேலை நிறுத்தம் தொடர்வதால் கடந்த ஒரு மாதம் காலமாக வேலை இல்லாமல் அவதிப்படும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு இந்த நிதியைக் கொடுத்திருக்கிறார் விஷால். நிதியைப் பெற்றுக் கொண்ட, ஃபெப்சி யூனியன் தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் விஷாலுக்கு, ஃபெப்சி தொழிலாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

FefsiFilm Employees Federation of South IndiaTamil Cinema Strikevishal
Comments (0)
Add Comment