விஷாலில் வேகமான செயல்பாடு நடிகர் சங்கத்தை கைப்பற்றுகிற அளவுக்குப் போனது.
அவருடைய அணியில் ஜெயித்த அத்தனை பேரும் வெற்றி பெற்ற பிறகும் கூட தொடர்ந்து நடிகர் சங்கம் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறார்கள் என்பதே சக உறுப்பினர்கள் கொடுக்கும் மனம் திறந்த பாராட்டு.
ஆனால் இப்போது அந்த பாராட்டுகளே விஷாலின் வாய் நீளத்தை அதிகமாக்கி தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கிற அளவுக்கு ஆளாக்கியிருக்கிறது.
சென்ற வாரம் வெளியான ‘ஆனந்த விகடன்’ வார இதழில் விஷால் கொடுத்த பேட்டி ஒன்று தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.
‘தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம்தான் காரணம். திருட்டு வி.சி.டி.யை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. எப்படி நடிகர் சங்கத்தை கையில் எடுத்தோமோ? அதேபோல், ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் போட்டியிடுகின்ற சூழல் எங்களுக்கு வந்துள்ளது’’ என்பது தான் விஷால் கூறிய பேட்டியில் விஷால் சொன்ன கருத்து.
இது போதாதா? உடனே தயாரிப்பாளர்கள் விஷாலின் கருத்துக்கு பெரும் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதோடு இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் கூட்டம் நடந்திருக்கிறது.
அதில் விஷாலின் பேச்சுக்கு தயாரிப்பாளர்கள் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள்.
சரி விஷாலின் இந்தப் பேச்சுக்கு அடிப்படை காரணம் என்ன?
திருட்டு விசிடி கும்பலுக்கு எதிராக நடிகர் விஷால் தனது குழுவினருடன் இணைந்து வேலை செய்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். சூர்யா நடித்த ’24’ படத்தின் திருட்டு விசிடி பெங்களூரில் உள்ள பி.வி.ஆர் தியேட்டரில் எடுக்கப்பட்ட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் அந்த தியேட்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகிரங்கமாக பேசினார். அதன் ஆதங்கம் தான் ஆனந்த விகடன் பத்திரிகையில் சென்ற வாரம் விஷால் கொடுத்த காட்டமான பேட்டி.
”நடிகர் சங்க வேலைகளே இன்னும் தலைக்கு மேல் இருக்கும் போது விஷாலுக்கு ஏன் இந்த வாயைக் கொடுத்து வம்பை வாங்கிக் கொள்கிற வேண்டாத வேலை” என்பது தான் விஷாலின் இந்தப் பேச்சுக்குறித்து ஒரு சாராருடையை கருத்தாக இருக்கிறது.
அதே சமயம் ”விஷால் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் அதன் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடுவதே இல்லை. விஷால் மாதிரி இன்னும் சிலபேர் பேச ஆரம்பித்தால் தான் தயாரிப்பாளர் சங்கம் உண்மையிலேயே தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் சங்கமாக இருக்கும்” என்பதில் இன்னொரு சாராருடைய கருத்தாக இருக்கிறது.
இதற்கிடையே விஷாலின் ‘கத்திச்சண்டை’ படத்தை தவிர்த்து அடுத்தடுத்த படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வந்திருக்கிறதாம். அவர் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமாம்.
சங்கம்ன்னாலே சர்ச்சை தான் போல..?