அரசியல்வாதிகளின் பிடியில் தியேட்டர் அதிபர்கள் இருப்பது சினிமாவுக்கு நல்லதல்ல! : பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை

Get real time updates directly on you device, subscribe now.

arthanari

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் அர்த்தநாரி . ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குனர் பாலாவிடம் பணியாற்றிய சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் .

சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் பாரி வேந்தர் பாடல்களை வெளியிட , மைக்ரோசாப்ட் நிறுவன முன்னாள் தலைவர் ரங்க பாஷ்யம் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பழம்பெரும் தயாரிப்பாளர் கோவைத்தம்பி ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

படத்தின் ட்ரெய்லர் ஒரு அண்டர்கவர் பெண் போலீஸ் அதிகாரியின் நடவடிக்கைகளைப் பற்றியதாக இருந்தது .

விழாவில் நாயகன் ராம்குமார் பேசும்போது ”அருந்ததி சண்டைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். அடுத்த விஜயசாந்தியாக அவர் வருவார்” என்றார் .

கோவைத் தம்பி தன் பேச்சில் “ஒரு காலத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் , அப்புறம் நடிகர், நடிகையர்கள் , அப்புறம் இயக்குனர்கள் கையில் இருந்தது. இப்போது அது திரையரங்கு உரிமையாளர்கள் கையில் இருக்கிறது . அது கூட தப்பில்லை . ஆனால் அந்தத் திரையரங்கு உரிமையாளர்கள் அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறார்கள். இது மாறும் வரை தமிழ்சினிமா நல்ல நிலைக்கு வராது” என்று பேசி பரபரப்பை கிளப்பினார்.

நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசும்போது “இங்கே திரையிடப்பட்ட பாடல்களால் இந்தப் படம் என்னவோ காதல் படம் போல இருந்தாலும், இந்தப் படத்துக்குள் குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் பற்றிய ஒரு ஸ்ட்ராங்கான கதை உண்டு . அது இந்தப் படத்துக்கு உதவும் . இயக்குனர்கள் சங்கத்துக்கு பாரி வேந்தர் தனது குழும மருத்துவமனைகள் மூலம் செய்யும் உதவிகளை நடிகர் சங்கத்துக்கும் செய்ய வேண்டும் ” என்றார் .

பாரி வேந்தர் தன் பேச்சில் ”என்னோடு எப்போதும் உடன் இருக்கும் முத்தமிழ் இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார். தமிழ் சினிமா தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். படத்தில் நல்ல கதை இருக்கிறது. அவர் இந்தப் படத்தில் வெற்றி பெற்று நிறைய படங்களை எடுக்க வேண்டும்” என்றார்.