பாகுபலி 2 – விமர்சனம்
RATING : 4/5
‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்?’ ‘தேவசேனையை ஏன் பல்வாள் தேவன் சிறை பிடித்து வைத்திருக்கிறார்?’ முதல் பாகத்தைப் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதுக்குள் எழுந்த இந்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு எக்ஸ்ட்ரீம் லெவல் விஷுவல் ட்ரீட்டாக வந்திருக்கும் படம் தான் இந்த இரண்டாம் பாகம் ”பாகுபலி 2.”
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த இரண்டாம் பாகத்தில் மகிழ்மதி சாம்ராஜ்யத்தின் அரசனாக பாகுபலி பிரபாஸூக்கு முடி சூட்ட விரும்புகிறார் ராணி சிவகாமியான ரம்யா கிருஷ்ணன். அதே நேரத்தில் அவருக்கு பேரழகு கொண்ட பெண்ணையும் மணம் முடித்து வைக்க முடிவெடுக்கிறார்.
இந்த வேலைகளுக்கு நடுவே நாட்டுக்குள் சென்று மக்களின் வாழ்க்கை நிலையை அவர்கள் அருகிலேயே சென்று அறிந்து வர ஆசைப்பட்டு கட்டப்பாவையும் கூட்டிக் கொண்டு செல்கிறார் பிரபாஸ்.
போன இடத்தில் பேரழகும், வீரமும் கொண்ட குந்தலதேசத்தின் அரச வம்சத்தைச் சேர்ந்த தேவசேனா அனுஷ்கா மீது காதலில் விழுகிறார். ஆனால் அவரிடம் தன்னை ஒரு வீரனாகக் காட்டிக் கொள்ளாமல் ஒரு சாதுவான ஆளாக காட்டிக் கொள்கிறார்.
இதற்கிடையே அனுஷ்காவின் ஓவியம் ஒன்றைப் பார்த்து அவளை மணம் முடிக்க ஆசைப்படும் பல்வாள் தேவன் ராணா அதற்கான சம்மதத்தை ரம்யாகிருஷ்ணனிடம் பெறுகிறார்.
பிரபாஸூக்கும், அனுஷ்காவுக்கும் இடையே இருக்கின்ற காதலை தெரிந்து கொள்ளாமல் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்து கொடுக்க வாக்கு கொடுக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
கொடுத்த வாக்கை ரம்யா கிருஷ்ணன் நிறைவேற்றினாரா? இல்லையா? உட்பட முதல் பாகத்தில் தொக்கி நின்ற பல கேள்விகளுக்கு விடைகளுமாக சரித்திரப் பின்னணியில் மிரள வைக்கும் பிரம்மாண்டக்காட்சிகளுடன் கைதட்டல்களை அள்ளுவது தான் கிளைமாக்ஸ்.
முதல் பாகத்தில் நாம் பார்த்து பார்த்து அதிசயித்த, நம்மை வியந்து வியந்து பேச வைத்த ஹை குவாலிட்டி விஷுவல் தரமும், பின்னணி இசையும், காட்சிக் கோர்வைகளும் எந்த குழப்பமும் இல்லாமல் இந்த இரண்டாம் பாகத்திலும் படமாக்கப்பட்டிருக்கிறது.
மரங்களை பிடுங்கி எறிவது, ஒற்றை ஆளாக பிரம்மாண்டத் தேரை இழுத்து வருவது, கோட்டைச் சுவர்களுக்குள் பறந்து பறந்து சண்டைகள் செய்வது என பிரபாஸ் போட்டிருக்கும் உழைப்பு வாழ்நாள் சாதனை.
அவரைப் போலவே ராணாவும் நடிப்பில் சளைக்கவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் வெற்றுடம்பை வீரியம் கொண்டு காட்டுகிற போது வெளிப்படுகிற கம்பீரம் திரையை மிரள வைக்கிறது.
மகாராணி சிவகாமியாக இந்த இரண்டாம் பாகத்திலும் கண்களாலேயே நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் ரம்யா கிருஷ்ணன். அதிலும் அவர் ”இதுவே என் கட்டளை, அதுவே என் சாசனம்” என்கிற வசனத்தை உச்சஸ்தாயில் உச்சரிக்கிற போதெல்லாம் சிங்கத்தின் கர்ஜனை.
முதல் பாகத்தை விட எக்ஸ்ட்ரா வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார் நாசர். சத்யராஜை நக்கலாக ‘நாய்’ என்று அழைக்கிற போதும், தன் மகனை அரியாசனம் ஏற்றுவதற்கு காய்களை நகர்த்துகிற போதும் காட்டுகிற நடிப்பு நரித்தனம்.
முதல் பாகத்தில் அவ்வளவாக சீன்கள் இல்லையே என்று வருத்தப்பட்ட அனுஷ்கா ரசிகர்களைப் போல இதில் தமன்னாவின் ரசிகர்கள் வருத்தப்படுவார்கள். முதல் பாகத்தின் பேட்ச் ஒர்க் காட்சிக்காக மட்டுமே வந்து போகிறார் தமன்னா.
கட்டப்பாவாக வரும் சத்யராஜ் இதில் காமெடி செய்து சிரிக்கவும் வைக்கிறார். விசுவாசத்துக்கும், பாசத்துக்குமிடையே சிக்கித் தவிக்கும் அவருடைய கேரக்டர் வெளிப்படுத்துகிற உடல்மொழிகள் அபாரம்.
சிறு குறை கூட காண முடியாத கோத்தகிரி வெங்கடேஷின் நேர்த்தியான எடிட்டிங்கும், கண் கொட்டாமல் பார்க்க வைக்கிற எஸ்.எஸ்.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் கண்களுக்கு கலை விருந்து. கீரவாணியின் பின்னணி இசையில் குறையில்லை என்றாலும் முதல் பாகத்தில் இருந்த இனிமையான பாடல்கள் இதில் மிஸ்ஸிங்.
சாபு சிரில் போட்டிருக்கிற பிரம்மாண்டமான செட்டுகளும், அதற்கு வி.எப்.எக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் உயிர் கொடுத்திருக்கிற விதமும் எது கிராபிக்ஸ்? எது ஒரிஜினல்? என்று தெரியாதபடி என்று யோசிக்கிற வைக்கிற மலைகள், பிரம்மாண்டக் கட்டிடங்கள், அருவிகள், கோட்டைகளின் கலைநயமிக்க உள் வடிவமைப்புகள் அனைத்தும் நம்மை சரித்திர கால உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது. செலவாகியிருக்கிற ஒவ்வொரு பைசாவுக்குமான உழைப்பை திரையில் மிச்சம் வைக்காமல் கொட்டியிருக்கிறார்கள் படத்தில் உழைத்திருக்கும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும்!
முதல் பாகத்தில் முழுமைக்குமாக இருந்த விறுவிறுப்பு இந்த இரண்டாம் பாகத்தில் இடைவேளைக்குப் பிறகு குறைகிறது. அனுஷ்கா – பிரபாஸ் இடையேயான காதல் வழக்கமான சினிமா டெம்ப்ளேட் உட்பட இன்னும் சிற்சில குறைகள் கண்களுக்கு புலப்பட்டாலும், படம் முழுக்க தெரிகிற உச்சக்கட்ட பிரம்மாண்டம் அந்தக் குறைகளையெல்லாம் கடந்து சென்று நம்மை படத்தோடு ஒன்றிப் போகச் செய்கிறது.
மரக்கட்டையிலிருந்து தெறித்து விழுகிற சிறு துரும்பு கூட தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை படத்தில் மிகவும் சரியாகச் செய்திருக்கிறதுதே? என்று குறிப்பிட்டு காட்டுகிற அளவுக்கு பிசிறு தட்டாத காட்சியமைப்புகள்.
இப்படியொரு கலைநயம் மிக்க பிரம்மாண்ட சரித்திரப் படம் இந்திய சினிமா சரித்திரத்தில் இனி வருமா? வந்தாலும் அது ‘பாகுபலி’யின் சாதனையை முறியடிக்குமா? என்பது சந்தேகம் தான். இந்திய சினிமாவை உலக அளவில் உச்சப் புகழுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி!
பாகுபலி 2 – இந்திய சினிமா சரித்திரத்தின் உச்சம்!