காஸி – விமர்சனம்
RATING : 4/5
பூமிக்கு மேல் நடக்கின்ற போர் பற்றிய படங்கள் இந்தியாவில் ஏராளம் வந்திருக்கிறது. வான் வழித் தாக்குதல் உள்ளிட்ட எல்லை வீரர்களின் போர் முறைகளையும், அவர்களின் சாகசங்களையும், நாட்டுக்காக அவர்கள் செய்யும் தியாகங்களையும் அவைகளில் பார்த்திருப்போம்.
ஆனால் பூமிக்கடியில் நீர் மூழ்கிக் கப்பல்கள் மூலம் நாட்டை பாதுகாக்கும் கடற்படை வீரர்களின் தாக்குதல்களையும், சாகசத்தையும், தியாகத்தையும் இதுவரை இந்திய சினிமா எதிலும் யாரும் பார்த்திருக்க முடியாது.
இதுபோன்ற சமாச்சாரங்களை ஆங்கிலப் படங்களில் வந்தால் வியந்து பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே நகர்கையில் இதெல்லாம் ஹாலிவுட்ல மட்டும் தான் சாத்தியம் என்று பேசிக்கொள்வதும் உண்டு. அப்படிப்பட்ட இந்திய சினிமா மீது நம்பிக்கையில்லா ரசிகர்களுக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும், குறிப்பாக ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் தொழில்நுட்பத்திலும், பிரம்மாண்டத்திலும் புதுவித அனுபவத்தையும் ஒரு சேரக் கொடுத்திருக்கும் படம் தான் இந்த ”காஸி.”
முழுக்க முழுக்க ஆழ் கடலுக்கடியில் நீர் மூழ்கிக் கப்பலில் எடுக்கப்பட்ட இந்த ”காஸி” இந்திய சினிமாவின் இன்னொரு மைல்கல் என்று சொன்னால் அதில் எள்ளளவும் மிகையில்லை.
1971-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின் போது ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தை குறிவைத்து தாக்க வந்த பாகிஸ்தானின் ‘காஸி’ நீழ்மூழ்கிக் கப்பலை இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பலான ‘சி-21’ எப்படி முறியடித்தது என்பது தான் படம்.
இந்த தாக்குதலை ‘ப்ளூ ஃபிஷ்’ என்ற புத்தகத்தில் எழுதிய இளைஞர் சங்கல்ப் தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை பிரேமுக்குப் பிரேம் ஹாலிவுட் தரத்துக்கு சவால் விட்டிருக்கும் இயக்குநர் சங்கல்ப்பின் விறுவிறுப்பான திரைக்கதை யுக்திக்கு ஒரு பிக் சல்யூட்.
இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் மார்க்கமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கிறது என்று இந்திய ரா அமைப்பின் மூலம் இந்திய கடற்படைக்கு தகவல் வர, அதை முறியடிக்கும் பொருட்டு இந்தியாவின் சி-21 நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கப்பல் கேப்டன்கள் கே.கே மேனன், ராணா, அதுல் குல்கர்னி ஆகியோர் தலைமையில் கடற்படையினர் குழு கிளம்புகிறது.
காஸி கப்பலைத் தேடிப் போகையில் அதற்காக ஆபத்தான முறையில் 300 மீட்டருக்கு கீழேவும் இறங்கி தாக்க முயற்சிக்கிறார் கேப்டன் கே.கே மேனன். அந்த முயற்சியில் பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் வைத்திருந்த கன்னிவெடித் தாக்குதலில் சி -21 கப்பல் சேதமடைகிறது. அந்த இக்கட்டான நிலையிலும் பாகிஸ்தானின் தாக்குதலை இந்திய நீர்முழ்கிக் கப்பல் முறியடித்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை சீனுக்குச் சீன் இந்திய கடற்படை வீரர்களின் போர் முறையில் தென்படுகிற விறுவிறுப்பும், பரபரப்பும் நம் நாடி, நரம்புகளில் எல்லாம் முழுமையாகக் கலந்து கைதட்டல்களை அள்ளிக்கொண்டே இருக்கின்றன. இரண்டு நீர் மூழ்கிக் கப்பல்களை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரத்திலும் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் திரைக்கதையை கையாண்டிருக்கிறார் இயக்குநர் சங்கல்ப்.
பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கிக் கப்பல் அருகில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் சென்றவுடன் அதை தெரிந்து கொண்டு அடுத்தடுத்து ஏவப்படும் குண்டுகள் எங்கே இந்திய கப்பலைத் தாக்கி விடுமோ? என்கிற பதற்றமும், பரபரப்பும் காட்சிகளைப் பார்க்கும் நம்மையும் அப்படியே தொற்றிக்கொள்கின்றன.
அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. எதிரி அருகில் இருப்பது தெரிந்து விட்டால் நொடி கூட தாமதிக்காமல் தாக்குதலை நடத்தி விட வேண்டுமென்கிற கேப்டன் கே.கே.மேனனின் ஆவேசமும், கோபமும் அப்படியே படம் முழுக்க அவர் காட்டுகிற சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்கள் அபாரம்.
இதே போல முன்பு நடந்த தாக்குதலின் தன் அருமை மகனை இழந்ததை நினைத்து அவன் புகைப்படத்தைப் பார்த்து உருகுவதும், ராணாவுடன் மோதும் போது பார்வையாளர்களுக்கு அவர் விதிமுறைகளை மீறுகிறார் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தினாலும் அதே கே.கே.மேனன் ராணாவின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்து மனம் மாறி ஒரு காட்சியில் ராணாவைக் காப்பாற்ற தன் உயிரை விடுகிற போதும் மனுஷன் ரசிகர்களின் நெஞ்சங்களில் உயர்ந்து நிற்கிறார்.
பங்காளாதேஷ் அகதியாக வந்து இந்திய கப்பலில் அடைக்கலமாகும் நாயகி டாப்ஸிக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. படத்தில் ஒரு பெண் கேரக்டராவது வேண்டுமென்பதற்காக டாப்ஸியின் கேரக்டர் திணிக்கப்பட்டிருக்கிறதோ? என்று தோன்றினாலும் அதையும் கூட அளவாக பயன்படுத்தி படத்தின் விறுவிறுப்புக்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
தனக்கு சீனியர் என்று தெரிந்தும் கூட அடிபட்ட நிலையில் தனக்கடுத்த நிலையில் உள்ள ராணாவையே கேப்டனாக ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்து நாட்டுக்காக போராட முடிவு செய்கிற போது தேசத்தின் பாதுகாப்புக்காக தங்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கவும் இந்திய கடற்படை வீரர்கள் தயங்குவதில்லை என்கிற ஒற்றுமை உணர்வை அப்பட்டமாகக் காட்டியிருக்கிறது அதுல் குல்கர்னியின் பண்பட்ட நடிப்பு.
சேதமடைந்த நிலையிலும் மனம் உறுதி தளராத ராணா பாகிஸ்தான் நீர்முழ்கிக் கப்பலின் தாக்குதலை முறியடிக்க வியூகம் வகுப்பதும், சக வீரர்களை எந்த சூழலிலும் மனம் தளர விடாமல் தேசிய கீதம் பாட வைத்தும், உணர்ச்சி உரை ஆற்றியும் வீரர்களை தயார் படுத்துகிற காட்சிகளில் படம் பார்க்கிற அத்தனை ரசிகர்களும் மனம் சிலிர்த்துப் போகிறார்கள்.
நிஜமான கப்பல் ஒன்றில் படமாக்கப்பட்டிருந்த விதத்திலும், அதன் ஒவ்வொரு அங்குலத்தையும் தொழில்நுட்பம் மூலம் அழகாக காட்சிப்படுத்தியிருந்த விதத்திலும் படத்தில் பங்காற்றிய அத்தனை பேரும் உழைப்பை கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக மதியின் ஒளிப்பதிவும், கேயின் காதை இம்சிக்காத பின்னணி இசையும் கூடுதல் பலம்.
என் தேசம், என் மக்கள் என்கிற உணர்வோடு நாட்டைப் பாதுகாக்கும் கடற்படை வீரர்களின் தேசப்பற்றையும், தியாகத்தையும் பற்றிப் பேசும் இந்தக் காஸி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் குடும்பத்தோடு போய் பெருமையோடு பார்த்து ரசிக்க வேண்டிய படம்!
காஸி – பெருமிதம்