செக்கச் சிவந்த வானம் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING 3/5

நடித்தவர்கள் – விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர்

இசை – ஏ.ஆர். ரஹ்மான்

ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்

இயக்கம் – மணி ரத்னம்

வகை – ஆக்‌ஷன், கிரைம், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – ‘U/A’

கால அளவு – 2 மணி நேரம் 24 நிமிடங்கள்

‘மல்டி ஸ்டார்’ படங்கள் என்பது தமிழில் பார்ப்பது அரிதிலும் அரிது.

அந்தக்குறையை போக்கும் விதமாக விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய் என தமிழின் முன்னணி ஹீரோக்களை வைத்து கேங்க்ஸ்டர் கதைக்களத்தோடு வந்திருக்கும் படம் தான் இந்த ‘செக்க சிவந்த வானம்.’

படத்தின் தொடக்கக் காட்சியிலேயே பெரிய டான் ஆக இருக்கும் பிரகாஷ்ராஜை காரில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அவரது தொழில் போட்டியாளரான தியாகராஜன் தான் இந்த வேலையைச் செய்திருப்பார் என்று பிரகாஷ்ராஜின் மூத்த மகனான அரவிந்த் சாமி சந்தேகிக்கிறார்.

Related Posts
1 of 114

ஆனால் எனக்கும் அந்த கொலை முயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சத்தியம் செய்கிறார் தியாகராஜன். அப்படியானால் பிரகாஷ் ராஜை கொலை செய்ய முயற்சித்தது யார்? எதற்காக என்ற கேள்விக்கு பதிலாக அமைவதே கிளைமாக்ஸ்.

இரண்டு ஹீரோக்களை வைத்து படமெடுத்தாலே இருவருடைய கேரக்டருக்கும் சரிசமமாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது இயக்குனருக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால் மணிரத்னம் இத்தனை நடிகர், நடிகைகளை வைத்து, அத்தனை பேருக்கும் கச்சிதமாக காட்சிகளை பகிர்ந்து கொடுத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார்.

வழக்கமான டான் கதைகளில் ஹீரோ மற்றும் அவரது அடியாட்களை மட்டுமே காட்சிகள் நகரும், ஆனால் இதில் ஒரு டான் அவருடைய குடும்பம், அவருடைய மகன்கள் அவர்களுடைய வாழ்க்கை, பேரக்குழந்தைகள் என காட்டியிருக்கிறார்கள்.

அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் மூவரும் தங்கள் கேரக்டர்களில் வழக்கத்தை விட கூடுதலாக விளையாடியிருக்கிறார்கள். மூவருமே மணிரத்னம் படத்தின் ஸ்டைலீசான ஹீரோக்களாக மாறியிருக்கிறார்கள்.

எப்படி மற்ற படங்களில் கலகலப்புடன் கூடிய கேரக்டரில் சாதாரணமான வருவாரோ அப்படியே மாறாமல் வருகிறார் போலீசாக வரும் விஜய் சேதுபதி. படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையை தனது அசால்ட்டான நடிப்பால் தியேட்டரை சிரிப்பில் ஆழ்த்துகிறார்.

மருமகளாக வரும் ஜோதிகா, சிம்புவின் காதலியாக வரும் டயானா எரப்பா, அரவிந்த் சாமியின் கள்ளக் காதலியாக வரும் அதிதி ராவ், பிரகாஷ் ராஜின் மனைவியாக வரும் ஜெயசுதா என படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களும் தங்கள் கேரக்டரை உணர்ந்து யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கூவமாக இருந்தாலும் அதையும் ரசிக்கும்படி அழகாக்கி காட்டும் வித்தை மணிரத்னம் பட ஒளிப்பதிவாளருக்கே உள்ள தனித்துவம். அந்த வகையில் சந்தோஷ் சிவனின் இசையில் சென்னை, துபாய், செர்பியாவின் அழகை மெய் மறந்து ரசிக்கலாம். குறிப்பாக சேசிங் காட்சிகளில் கேமரா கோணங்கள் ஆசம்!

கேங்க்ஸ்டர் படமென்பதால் பாடல்கள் தேவையில்லை. காட்சிகளுக்கிடையே சின்னச் சின்னதாய் வந்து வந்து போகிறது மழைக்குருவி உள்ளிட்ட பாடல்கள். எரிச்சல் தராத பின்னணி இசையில் சீட்டை அதிர வைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பொதுவாகவே கேங்க்ஸ்டர் படமென்றாலே திரை முழுக்க ரத்தம் தெறிக்கும், ஆனால் இதில் முகம் சுளிக்காதபடி விறுவிறுப்பான ஸ்டண்ட் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.

ஏதோ ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்கிறார்கள் ரசிகர்கள். நமக்கு என்னமோ நாயகனின் இரண்டாம் பாகமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

செக்க சிவந்த வானம் – விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர்!