செம்பரம்பாக்கத்தில் ரஜினி! : ஆரம்பமானது ‘எந்திரன் 2’
ரஜினி – ஷங்கர் காம்பினேஷன் என்றாலே மழை வெள்ளம் போல ரசிகர்களின் மனசுக்குள் உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விடும்.
அந்தளவுக்கு இருவருடைய காம்பினேஷனிலும் வந்த ‘சிவாஜி’, ‘எந்திரன்’ இரண்டு படங்களும் பிரம்மாண்டத்தில் மிரட்டியவை.
அதிலும் ‘எந்திரன்’ தமிழ்சினிமா வரலாற்றிலேயே தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை கவர்ந்தது. பட்ஜெட் பெருசு என்றாலும் வசூலும் அதைவிட அதிகமாக இருந்ததே இப்போது அதன் இரண்டாம் பாகம் தயாராக ஒரு காரணம் என்பதும் உண்மை.
2010 ஆம் ஆண்டு ரிலீசான ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வர, இதோ இன்று அவர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காடச் செய்து விட்டார் இயக்குநர் ஷங்கர்.
ஆமாம், டிசம்பர் 16-ம் தேதியான இன்று ‘எந்திரன் 2’ படப்பிப்பு சென்னையில் ஆரம்பமானது. சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது.
முதல்நாள் படப்பிடிப்பான இன்று சிட்டி கேரக்டரின் அப்கிரேடு கேரக்டர் சிட்டி வெர்ஷன் 2வாக ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
எப்போதுமே ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் இடையே சிறிது ஓய்வெடுக்கும் ரஜினி தற்போது கோவாவில் ‘கபாலி’ படப்பிடிப்பு முடியவும் நேராக ‘எந்திரன் 2’ படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.
விஜய் நடித்த ‘கத்தி’ படத்தைத் தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சுமார் 250 கோடி ரூபாயில் இந்த பிரம்மாண்டமான எந்திரன் 2 வை தயாரித்து வருகிறது.