விவசாயிகளை காப்பாற்ற புதிய திட்டம் : ரியல் ஹீரோவாக களமிறங்குகிறார் ஜி.வி.பிரகாஷ்!
வெள்ளம், புயல் என ஏதாவது இயற்கை இடர்பாடுகள் வந்து விட்டால் அவர் அத்தனை லட்சம் கொடுத்தார், இவர் இத்தனை லட்சம் கொடுத்தார் என்று பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவது சில முன்னணி ஹீரோக்களின் ரசிகர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.
அப்படித்தான் சென்னையில் வெள்ளம் வந்த போது சில முன்னணி ஹீரோக்கள் 15 லட்சம் கொடுத்தார், 10 லட்சம் கொடுத்தார் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அவரது ரசிகர்கள் கிளப்பி விட்டார்கள்.
ஆனால் அப்படியெல்லாம் எந்த கொடுக்கலும் இல்லை என்பதே அந்தச் செய்திகள் பரவிய அடுத்த இரண்டு தினங்களில் உறுதியான விஷயம்.
இந்த நிலையில் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜி.வி. பிரகாஷைப் பற்றியும் நேற்று ஒரு செய்தி பரவியது.
வெறொன்றுமில்லை கடும் வறட்சியால் தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அப்படிப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் ஒரு சிறு முயற்சியாகத் தான் ஒரு படத்தில் வாங்கும் சம்பளம் முழுவதையும் விவசாயிகளுக்கே கொடுக்க ஜி.வி முடிவெடுத்திருப்பதாகச் சொன்னது அந்தச் செய்தி.
வழக்கம் போல இதுவும் ரசிகர்கள் அவிழ்த்து விட்ட பொய்யாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் அப்படியில்லாமல் உண்மையிலேயே ஜி.வி எடுத்த முயற்சி என்பது தெரிய வந்திருக்கிறது.
நான் விவசாயிகளுக்காக உதவ நினைத்திருப்பது உண்மை தான். ஆனால் ஒரு படத்தின் சம்பளத்தை கொடுப்பதோடு நிற்கப்போவதில்லை. மாறாக விவசாயிகளுக்கென்று தனியாக தொண்டு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலமாக தொடர்ந்து உதவி செய்யப்போகிறேன் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் ஜி.வி
நல்ல மனம் வாழ்க!