களவு தொழிற்சாலை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RFEVIEW1

RATING : 2/5

நட்சத்திரங்கள் : வம்சி கிருஷ்ணா, களஞ்சியம், கதிர், குஷி மற்றும் பலர்.

இயக்கம் : டி. கிருஷ்ணசாமி

வகை : த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U’

கால அளவு : 2 மணி நேரம் 28 நிமிடங்கள்

ர்வதேச சிலைக்கடத்தல் பின்னணியில் செயல்படும் கும்பலைப் பற்றிய கதை தான் இந்த ‘களவு தொழிற்சாலை.’

தஞ்சாவூரில் உள்ள ஒரு கிராமத்தில் தொன்மை வாய்ந்த சிவன் கோவிலில் இருக்கும் 500 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பு கொண்ட மரகத லிங்கம் ஒன்றை கடத்த திட்டம் போடுகிறார் சர்வதேச சிலைக்கடத்தை கும்பலைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா.

அதற்காக பத்திரிகை நிருபர் என்ற பெயரில் கோவிலுக்குள் நுழையும் அவர் சிலையை கடத்துவதற்காக எல்லா வழிகளையும் கேமராவில் படம்பிடித்துக் கொள்கிறார்.

அதே சமயம் உள்ளூரில் இருக்கும் ஒருவரின் உதவி கிடைத்தால் இன்னும் எளிதாக சிலையைக் கடத்தலாமே? என்று யோசிக்கிறார். அதற்காக அதே ஊரைச் சேர்ந்த 500க்கும், ஆயிரத்துக்கும் சிலைகளைத் திருடும் கதிரிடம் பேசுகிறார்.

காதலியுடன் வசதியான வாழ்க்கையை வாழ ஆசைப்படும் கதிரும் ஓ.கே சொல்ல, அவரின் உதவியோடு கோவிலிருந்து மரகத லிங்கத்தை கடத்தும் வம்சி கிருஷ்ணா அதை வெளிநாட்டுக்கு அனுப்பத் தயாராகிறார்.

அப்புறமென்ன? கோவிலில் மரகத லிங்கம் காணாமல் போன விஷயம் காவல்துறைக்கு தெரிய வருகிறது. அதைக் கண்டுபிடிக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக வருகிறார் இயக்குநர் மு.களஞ்சியம்.

திட்டமிட்டபடி கடத்திய லிங்கத்தை வம்சி கிருஷ்ணா வெளிநாட்டுக்கு அனுப்பினாரா? அவருடைய திட்டத்தை போலீஸ் அதிகாரியான மு.களஞ்சியம் முறியடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

சிலைக்கடத்தல் கதை என்றதும் ஏதோ நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

மெதுவாக நகரும் காட்சிகளில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று எழுகிற கேள்விகளுக்கு எந்த சஸ்பென்ஸும் வைக்காமல் காட்சிகளை யூகித்து விட முடிகிறது. அந்தளவுக்கு திரைக்கதையை மிக எளிமையாக அமைத்திருக்கிறார்கள்.

ஹீரோ கதிர், ஹீரோயின் குஷி இருவருக்குமான காதல் கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட ஒட்டவில்லை. தன் காதலன் திருடன் என்று தெரிந்தும் எந்தப் பெண் அவனையே உருக உருக காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுவாள்? என்பது டைரக்டருக்கே வெளிச்சம்.

பல படங்களில் கம்பீரமான வில்லனாக நாம் பார்த்த வம்சி கிருஷ்ணா இதில் அளந்து தான் அந்த வில்லன் கேரக்டரில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் 500 கோடிக்கும் மேலான மதிப்பு கொண்ட ஒரு பொருளை கடத்தச் செல்லும் போதும் உள்ளூரில் 500க்கும், 1000க்கும் அலைகிற ஒரு சாதாரண சிலைத்திருடனையா முழுமயாக நம்பிப் போவார்?

ஒரு பெரிய கோவிலுக்குள் சிலையை கடத்தச் செல்பவர்கள் முகத்தில் எந்தப் பதட்டமும் இல்லாமல் ஜோக்கடித்து சிரித்துக் கொண்டே செல்வார்களா?

கோவிலுக்கு அருகிலேயே ஒரு காரை நிறுத்தி விட்டு அதே கோவிலுக்குள் சாவகாசமாக திருடப்போவதெல்லாம் சாத்தியம் தானா?

கையில் துப்பாக்கி இருந்தும் தன்னை அடிக்கும் வம்சியை களஞ்சியம் சுடாமல் இருப்பது? அந்த டெண்டுக்குள் வம்சி கிருஷ்ணா கொண்டு வந்த மரகத லிங்கம் உட்பட அத்தனை பொருட்கள் இருந்தும் அவற்றையெல்லாம் திறந்து பார்க்காமல் வம்சியை மட்டுமே தேடிப்போவது?

இப்படி காட்சிகள் நகர நகர நமக்குள் எழும் கேள்விகளும் எக்கச்சக்கம்.

ஒரு திருட்டுக் கேஷை கண்டுபிடிக்க வரும் போலீஸ் அதிகாரி எப்படியிருக்க வேண்டுமென்பது தெரியாதா? முகத்திலிருந்து 5 மீட்டர் தூரத்துக்கு மேக்கப்பைப் போட்டுக்கொண்டு விசாரணை அதிகாரியாக வரும் இயக்குநர் மு.களஞ்சியம் எதையோ பறிகொடுத்தவர் போலவே படம் முழுக்க காட்சியளிப்பது பரிதாபம்!

ஒரு காலத்தில் பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் செந்தில் இதில் காமெடிக்காக சில டயலாக்குகளையெல்லாம் பேசியும் சிரிப்பு வருவேனான் என்கிறது.

பழங்கால கோவிலுக்குள் செல்லும் அந்த சுரங்கப்பாதையை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் முரளி ராம்.

இரவு நேரக் காட்சிகளையும், சுரங்கப்பாதை உள் பக்க காட்சிகளையும் மிரட்டல் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தியாகராஜன். ஷியாம் பெஞ்சமினின் பின்னனி இசை எந்த பரபரப்பும் இல்லாமல் மென்மையாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் சிலை திருட்டு பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படும் இந்த நேரத்துக்கு பொருத்தமான படம் தான் என்றாலும், நிஜத்தில் நாம் கேள்விப்படுகிற விஷயங்களில் இருக்கிற விறுவிறுப்பும், திருப்புமுனை சம்பவங்களில் கால்வாசி இருந்திருந்தால் கூட நிஜமாகவே இந்தப்படம் நம் மனசைக் களவாடியிருக்கும்!