கோடியில் ஒருவன்- விமர்சனம்
தன் படங்களின் தலைப்புகளாலே ரசிகர்களை ஈர்க்கும் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவனாக எப்படி ஸ்கோர் செய்திருக்கிறார்? IAS ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் விஜய் ஆண்டனிக்கு வழி நெடுக வருகின்றன இன்னல்கள். சும்மாவே அநீதியைக் கண்டால் பொங்கும் அவர் எப்படி அநீதர்களை பொங்கச் சோறாக்கினார் என்பதே கதை..
80-களில் வெளியான அதே அரதப்பழசான கதை தான் என்றாலும் அதில் நவீன மசாலாவைத் தடவி தந்திருக்கிறார் இயக்குநர். விஜய் ஆண்டனி ஒழுங்காக நடித்தாலே ஓவராக தெரியும் போது.. அவர் ஓவராக நடித்தால் எப்படி இருக்கும்? அவருக்கு கண்கள் சிவந்து நரம்பு புடைக்கும் போதெல்லாம் ஆடியன்ஸுக்கு கொஞ்சம் டரியல் ஏற்படுகிறது. மாஸ் காட்ட வேண்டும் என்ற அவரது ஆசை புரிகிறது..ஆனாலும் அதற்கான உடல்மொழிக்கு அவர் இன்னும் மெனக்கெட வேண்டும் என்பதே உண்மை. ஆத்மிகா இந்தப்படத்தில் எதற்கு என்று கேட்கும் அளவே இருக்கிறது. விஜய் ஆண்டனியின் அம்மா கேரக்டர் அருமை. மேலும் படத்தின் வில்லன் காஸ்டிங்கும் மாஸ்
டெக்னிக்கலி படத்தில் பெரிய குறையொன்றும் இல்லை. பாடல்கள் கேட்கும்..கேட்க வைக்கும் ரகம். ஒளிப்பதிவும் ஓகே ரகம். பின்னணி இசை இன்னும் நன்றாக அமைந்திருக்கலாம். ரொம்ப பழைய பார்முலா திரைக்கதை தான் நிறைய இடங்களில் அலுப்புத் தட்டுகிறது. ஷங்கர் பட சாயலில் பிரச்சார நெடி தூக்கலாக இருப்பதால் கோடியில் ஒருவனுக்கு பச்சைக்கொடி காட்ட முடியவில்லை
2.5/5