பாலாவை முந்தினார் பாரதிராஜா! : பெருங்காமநல்லூரில் இன்று துவங்கியது ‘குற்றப்பரம்பரை’

‘குற்றப்பரம்பரை’ படத்தை யார் இயக்குவது என்கிற நீயா நானா போட்டியில் பாலாவை பின்னுக்குத் தள்ளி விட்டு போட்டியில் முந்தியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
முன்னதாக சென்ற வார குமுதம் இதழில் இந்த படம் குறித்து ‘குற்றப்பரம்பரை’ நாவலை எழுதிய எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி பேசியதே சர்ச்சையின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
அதில் பாலா தான் குற்றப் பரம்பரை படத்தை இயக்குவார். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாரதிராஜா வேலையில்லாமல் வெட்டியாக பேசிக்கொண்டிருக்கிறார் என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதனால் டென்ஷன் ஆன இயக்குநர் பாரதிராஜா இனியும் தள்ளிப் போட்டால் வேலைக்காகாது என்று நினைத்தவர் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் துவக்க விழாவை தடபுடலாக ஆரம்பித்திருக்கிறார்.
குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளைத் தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் சார்பில் உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படத்தொடக்க விழா இன்று காலை 10.30 மணிக்கு ( ஏப்ரல் 3 ) உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூரில் உள்ள வீர தியாகிகள் நினைவிடத்தில் விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சுசிந்திரன், பாண்டிய ராஜன், பொன்ராம், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பாரதிராஜா அறிவித்திருக்கிறார்.
வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் ஒருவேளை பாலாவே குற்றப்பரம்பரை படத்தை இயக்கியிருக்கலாம். ஆனால் பாலா அதற்கான ஆரம்பகட்ட வேலைகளில் இருக்கிற என்று வேல ராமமூர்த்தி உளறிக்கொட்டவும் உஷாரான பாரதிராஜா போட்டியில் முந்திக் கொண்டு குற்றப்பரம்பரை படத்தை இன்று ஆரம்பித்திருக்கிறார்.
என்ன வேல ராமமூர்த்தி அய்யா போச்சா…?