குற்றம் கடிதல் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

kuttram-kadithal-review5

RATING : 4.5/5

ளிமை உங்களுக்குப் பிடிக்கும் தானே? அப்படியானால் இந்தப்படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்.

இப்படத்தின் திரைக்கதை அப்படிப்பட்ட ஒன்றுதான். மனதோடு பின்னிப் பிணைந்து நம்மை வெகுவாக ஆட்கொள்கிறது.

அண்மைக் காலமாக தமிழ்த் திரையுலகில் அறிமுக இயக்குநர்கள் பிரமிக்க வைக்கிறார்கள். கதை, திரைக்கதை மட்டுமில்லாமல் தொழில்நுட்பங்களையும் சரி விகிதத்தில் கலந்து ஒரு பிரமாதமான படைப்பாகத் தருகிறார்கள்.

சக மனிதர்களின் வாழ்க்கையை படமாக்குவதில் கவனத்தை ஈர்த்து வரும் ஒரு சில இயக்குநர்களில் இப்படத்தின் இயக்குநர் ‘பிரம்மா.ஜி’யும் இடம் பிடிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படம் முடியவும்  தியேட்டரை விட்டு நகர்ந்து விடுங்கள். இரண்டு மூன்று நாட்கள் யோசித்துப் பார்த்தாலும் ‘குற்றம் கடிதல்’ படத்தில் எந்த ஒரு சிறுகுறையும் கண்டுபிடிக்க மாட்டீர்கள்.

அப்படி ஒரு நேர்த்தி. அந்த நேர்த்தி தான் ரிலீசுக்கு முன்பே இந்தப்படம் தேசிய விருது உட்பட பல விருது விழாக்களில் விருதுகளை வாங்கிக் குவிக்க காரணமாயிருந்திருக்கும்.

சமீபத்திய கல்விச்சூழல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? படிப்பு என்ற பெயரில் குழந்தைகள் எப்படியெல்லாம் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களால் அடக்கி வைக்கப்படுகிறார்கள்.

தவறு செய்யும் குழந்தையை அடித்தால் திருந்தி விடுமா? ஆசிரியரின் அடி கொடுக்கும் வலி குழந்தையின் சிறு மூளைக்குள் படிப்பையும், ஒழுக்கத்தையும் ஒரு சேர ஏற்றி விடுமா?

இல்லை, இல்லவே இல்லை என்பதை ஆணித்தரமாக அடித்துச் சொல்லும் படம் தான் இந்த ‘குற்றம் கடிதல்’.

பாலியல் கல்வி குழந்தைகளுக்கு தேவையா இல்லையா? என்கிற விவாதம் அந்தப்பள்ளி ஆசிரியர்களுக்குள் நடந்து வருகிறது.

‘பர்த்டே’ என்று தன் வகுப்பில் படிக்கும் சக மாணவன் ஒருவனுக்கு சாக்லேட் கொடுக்கிறாள் சிறுமி ஒருத்தி. சாக்லேட்டை வாங்கிய சிறுவனோ பதிலுக்கு சிறுமியின் கன்னத்தில் ‘முத்தம்’ கொடுத்து விடுகிறான்.

அந்த வகுப்புக்கு ஆசிரியர் வராததால் சப்டியூட் ஆசிரியராகச் செல்லும் ராதிகா பிரசித்தாவிடம் கம்ப்ளெயிண்ட் போகிறது. மாணவனை கண்டிக்கும் ஆசிரியையிடம் ”உங்களுக்கும் பிறந்த நாள் என்றால் முத்தம் கொடுப்பேன்” என்கிறான் அந்தக் குறும்புக்கார சிறுவன். கோபப்படும் டீச்சர் மாணவனின் கன்னத்தில் அறைந்து விட மயங்கிச் சரிகிறான் சிறுவன்.

அவ்வளவு தான் பள்ளிக் கூடத்தில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. பள்ளி நிர்வாகம் ராதிகா பிரசித்தாவை பிரச்சனை முடியும் வரை வெளியூரில் தங்கச் சொல்லிவிட்டு சிறுவனை மருத்துவமனையில் சேர்க்கிறது.

மனம் கேட்காமல் பாதுகாப்பு கருதி தனது கணவருடன் வீட்டை விட்டு வெளியேறினாலும், எப்படியாவது அந்த மாணவன் பிழைத்து விட வேண்டும் என்கிற பரிதவிப்பு மனசுக்குள்!

சிறுவன் பிழைத்தாக வேண்டுமே என்கிற படபடப்பில் பள்ளி நிர்வாகம் இருக்க, தலைமறைவான ஆசிரியையும், அவரது கணவரையும் தேடுகிறது சிறுவனின் குடும்பமும், போலீசும்.

முடிவு எப்படி இருக்குமோ? என்கிற உணர்வோடு படம் நகர, அப்பாடா… என்று நல்லவிதமாக சுபம் போட்டு அனுப்புகிறார் இயக்குநர் பிரம்மா.ஜி.

சென்சிடிவ்வான விஷயங்களை கையாளும் போது இருக்கிற நெருக்கடிகளும், அதை படமாக்குவதில் உள்ள சிக்கல்களும் இயக்குநர்களுக்கு சவால் தான். அதையெல்லாம் அழகாக கடந்து போகிறார் இயக்குநர் பிரம்மா.

வதவதவென்று கேரக்டர்களை உலவ விடாமல் விரல்விட்டு எண்ணி விடக்கூடிய அளவில் மட்டுமே கேரக்டர்களை பயன்படுத்தி சின்ன கேரக்டராக இருந்தாலும் அதையும் கூட ரசிகர்கள் மறந்து விடாதபடிக்கு திரைக்கதையில் அவர் செய்திருக்கும் மாயாஜாலம் ரொம்பப் புதுசு.

டீச்சர் மெர்லினாக வரும் புதுமுகம் ராதிகா பிரசித்தா என்ன ஒரு அருமையான நடிப்பு. கோபத்தில் சிறுவனை அடித்து விட்டு ”பரவாயில்ல சார் என்ன பிரச்சனை வந்தாலும் நான் சமாளிக்கிறேன்” என்று தப்பிக்க நினைக்காமல் பள்ளி முதல்வர் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பும் போது சிறுவனை நினைத்து மனதுக்குள் புழுங்குவதும் அடடா… அறிமுக நடிகையிடம் இப்படி ஒரு இயல்பான நடிப்பா..?

நல்லா வருவீங்க டீச்சர்.

அவரது கணவர் மணிகண்டனாக வரும் சாய் ராஜ்குமாரும் அப்படியே..? ”எவ்வளவு செலவானாலும் சரி அந்தப்பையன் பொழைச்சுக்கணும்” என்று எங்கும் தப்பிக்க நினைக்காமல் மனைவியுடனே துணைக்கு துணையாக நிற்பது சபாஷ்.

குறும்புக்கார சிறுவன் செழியனாக வரும் மாஸ்டர் அஜய் சிரித்த முகமாக பார்த்த உடனே கவர்கிறார். காட்சிகள் குறைவாக இருந்தாலும் குறையே சொல்ல முடியாத நடிப்பு.

இன்னொரு முக்கியமான கேரக்டர் செழியனின் மாமாவாக வரும் பாவெல் நவகீதன். வறுமையிலும் ஒரு நேர்மையான மனிதராக வருகிறார். மருமகனை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு தன் பக்க நியாயங்களுக்காக கோபத்தில் கதறுவதும், இறுதியில் உண்மை தெரியவரும் போதும் நியாயமாக நடந்து கொள்வதும் யதார்த்தம்.

அப்புறம் அந்த பள்ளி முதல்வராக வரும் குலோத்துங்கன், அவரது மனைவியாக வரும் துர்கா காட்சிகளில் அப்படி ஒரு ஆளுமை. செழியனின் நிலைக்காக நியாயம் கேட்க வரும் பாவெல் நவநீதன் உணர்ச்சிவசப்பட்டு ”இழந்து பார்த்தா தானே அதோட வலி தெரியும்” என்பார். அதற்கு துர்கா ”ஆமாம் தம்பி நாங்க இழந்திருக்கோம், நீங்க இருக்கிறதைப் பத்தி பேசுறீங்க. நாங்க இழந்ததை நெனைச்சு வருத்தப்பட்டிருக்கோம். எங்களுக்கும் ஒரு பையன் இருந்தான். ஆக்ஸிடெண்ட்டுல இறந்துட்டான். இழந்துட்டு நிக்கிறோம். இழப்போட வலி எங்களுக்கு உங்களை விட நல்லாவே தெரியும் தம்பி. போங்க விட்டுட மாட்டோம்” என்று பேசுகிற இடங்கள் கனம்.

சிறுவன் அஜய்யின் அம்மாவாக வரும் சத்யா வறுமைக்கு அடையாளமான மெலிந்த தேகத்தோடு விரக்தியான பார்வையாலேயே பேச வைக்கிறார். டீச்சர் மெர்லின் வந்து காலில் விழிந்து மன்னிப்பு கேட்கவும் அவரை கட்டிப்பிடித்து அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டுவது ஏழ்மையின் உயர்ந்த குணத்தை வெளிப்படுத்துகிறது.

மணிகண்டனின் ஒளிப்பதிவும், தேவையில்லாத சத்தங்களும் பாடல்களும் இல்லாத ஷங்கர் ரங்கராஜனின் இசையும் தனி கூடுதலான ரசனை.

‘குற்றம் செய்வது பாவம், ஆகையால் குற்றம் செய்யாமல் இருத்தலே நன்று’ என்கிற கருத்தை ரெண்டு மணி நேர படத்தில் ஆழமாக சொல்லி விடுகிறார் இயக்குநர் பிரம்மா ஜி.

இன்றைய கல்விச் சூழலை எளிமையாகவும், ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.ஜி இந்தப்படம் ஒட்டுமொத்த சமூகத்துக்கான பாடம் என்பதே தமிழ்சினிமாவுக்குப் பெருமை!