மெரினாவில் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்! : வந்ததும் தெரியல; போனதும் தெரியல
‘அவசரச் சட்டம் வேண்டாம்’, ‘நிரந்தரத் தீர்வு தான் வேண்டும்’ என்கிற முழக்கங்களோடு தொடந்து கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
ஜவரி 26 ம் தேதி குடியரசு தினம் என்பதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியது மாநில அரசின் கடமையாகிறது. இதனால் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மாநில அரசினால் எல்லா வழிகளிலும் முயற்சிகள் நடந்தேறியபடி இருக்கின்றன.
தன்னிச்சையான இந்த போராட்டத்தில் உலகமே வியந்து பாராட்டுகிற பல விஷயங்கள் நடந்தாலும் எப்போதுமே நடிகர், நடிகைகளைத் தேடிப்போகும் இளைஞர்களும், மாணவர்களும் இந்த போராட்டத்தில் தங்களைத் தேடி அவர்களை வர வைத்தது தான் மக்கள் மத்தியில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
இளைய தளபதி விஜய்யில் ஆரம்பித்து காமெடி நடிகர் மயில்சாமி வரை பல திரையுலக பிரபலங்கள் மெரினாவுக்கு வந்திருந்து இளைஞர்கள் மத்தியில் அமர்ந்து தங்களுடைய தமிழ் உணர்வை வெளிப்படுத்தினார்கள்.
நடிகைகளில் பெரும்பாலானோரை மெரினாவில் பார்க்க முடியவில்லை என்றாலும், முன்னணி நடிகையான நயன்தாரா மெரினாவில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். முகத்தை மறைத்துக் கொண்டு வராமல் நேரடியாக களத்துக்கு வந்த அவரை தங்களில் ஒருவராக உட்கார வைத்துக் கொண்டார்கள் மாணவர்கள்.
அவருடன் இயக்குநர் இயக்குநர் விக்னேஷ் சிவனும் வந்திருந்தார் என்பது தான் பெரும்பாலானோருக்கு தெரிந்திராத விஷயம். நயன்தாராவிடமிருந்து சில மீட்டர் இடைவெளியில் தள்ளி உட்கார்ந்திருந்தார் விக்னேஷ் சிவன்.
சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த அவர்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை என்று சொல்வது போல அமைதியாக உட்கார்ந்து போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டுச் சென்றார்கள்.
”பிறந்தது கேரளாவாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று அறிக்கை மூலம் சொன்னதோடு நின்று விடாமல் போராட்டக்களத்துக்கே வந்து தனது ஆதரவைக் கொடுத்த நயன்தாராவுக்கு பாராட்டுகளையும் தெரிவிக்க மறக்கவில்லை மாணவர்கள்!