நிலை மறந்தவன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

மதம் வியாபாரமானால் மனிதம் மரித்துப்போகும் என்பதை பேசுகிறான் நிலைமறந்தவன். மலையாளத்தில் பெரிய சர்ச்சைகளையும் வரவேற்பையும் ஒருங்கே பெற்ற ட்ரான்ஸ் என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்து நிலை மறந்தவன் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்

கன்னியாகுமரியில் பெரும் வறுமையின் பிடியில் வாழும் பகத்பாசில் தனக்கான லட்சியம் ஒன்றை வைத்திருக்கிறார். அந்த லட்சியத்தைத் தாண்டி அவருக்கு ஒரு வாய்ப்பு வருகிறது. அந்த வாய்ப்புக்குப் பின்னால் இருக்கும், வஞ்சம், மத அரசியல் ஆகியவற்றின் கலவை தான் நிலை மறந்தவன் கதை

படத்தில் உள்ள நிறைகளில் முழுநிறை பகத்பாசிலின் நடிப்பு தான். வறுமையின் பிடியில் வாழும் இளைஞனாகவும், மதபோதகரான பின் கோடிஸ்வரனாகவும் உடல்மொழியில் அத்தனை மாற்றங்களைச் செய்து அசத்துகிறார். நஸ்ரியாவிற்கு பெரிய வேடம் ஏதுமில்லை. கொடுத்த வேடத்தை கச்சிதமாகச் செய்திருக்கிறார். கெளதம் மேனென் நடிப்பும் படத்தின் பலம். விநாயகன் சிறந்த நடிப்பால் கவர்கிறார்.

இந்த மாதிரியான கதைக்கென்றே மதயிசையை வழங்கியிருக்கிறார் இசை அமைப்பாளர். படத்தின் ஒளிப்பதிவும் துல்லியமாக இருப்பதால் விஷுவலிலும் படம் பக்கா குவாலிட்டி. தமிழில் மொழி பெயர்த்திருப்பதால் பல வசனங்கள் போல்டாக இருக்கின்றன.

துவங்கும் போது மிக இயல்பாக பயணிக்கும் படம்..போகப்போக பக்கா சினிமாட்டிக்காக மாறுகிறது. அப்படி இருந்தாலும் படத்தில் ஸ்ட்ராங்கான மெசேஜ் இருப்பதால் நமக்கு அயர்ச்சி ஏற்படவில்லை. எனினும் பின்பாதியில் வரும் மதக்கூட்டம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓவர்டோஸ் தான். மதத்தை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தை குறிவைத்து அடித்ததில் நிலை மறந்தவன் நெற்றியடி அடித்து வெற்றி பெறுகிறான்
3/5