ஒன்பதிலிருந்து பத்து வரை : ஹைவேஸில் ஒரு த்ரில்லர் பயணம்!

Get real time updates directly on you device, subscribe now.

9-to-10

‘காந்தர்வன்’ படத்தின் ஹீரோவாக கவனம் ஈர்த்தார் புதுமுகம் கதிர்.

அப்படியிருந்தும் அவருக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. இருந்தாலும் தன்னுடைய முயற்சியை கை விடாத கதிர் இப்போது ஹீரோ சினிமாஸ் சார்பில் சொந்தமாக தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ படத்தை முழுமையாக நம்பியிருக்கிறார்.

படத்தை போட்டு பார்த்த ஹீரோ கதிருக்கு முழு திருப்தி. அதற்கு காரணம் படத்தின் இயக்குநர் விஜய் சண்முகவேல் அய்யனார்.

இயக்குநர்கள் பாக்யராஜ், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் சண்முகவேல் அய்யனார் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகும் படமிது.

கதிருக்கு ஜோடியாக ஸ்வப்னா மேனன் இந்தப் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் மோகன்லால் நடித்த மலையாளப் படமான ‘கீதாஞ்சலி’ படத்தில் நடித்தவர்.

“9 மணியிலிருந்து 10 மணி வரைக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படத்தின் கதை. ” என்கிற இயக்குநர் விஜய் சண்முகவேல் அய்யனார்

“நாயகி ஸ்வப்னா ஒரு முக்கிய விஷயமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் செல்கிறார். அந்தக் காரின் டிரைவர் தான் கதிர்.

Related Posts
1 of 4

அப்படி செல்கிற போது ஹீரோ கதிருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அவருக்கு வினோதமாக தெரிகிறது.

அதனால் எரிச்சலுடனே காரில் பயணம் செய்கிறார் ஸ்வப்னா. தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் இவர்களைப் பின் தொடர்ந்து போலீசும் செல்கிறது.

காஞ்சிபுரம் சென்றதும் ஸ்வப்னா, கதிருக்கு ஒரு அதிர்ச்சியைக் கொடுக்கிறார். பின்னர் கதிர், ஸ்வப்னாவுக்கு அதை விட பேரதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதுதான் படத்தோட கிளைமாக்ஸ்.

என்று சொல்லும் இயக்குநர் “இந்தப் படம் பல சுவாரசியமான திருப்பங்களுடனும், அதிரடி ஆக்‌ஷனுடனும், நகைச்சுவையுடனும் இருக்கும். ஒரு 20-20 மேட்ச் பார்த்தது போன்ற பரபரப்பு இருக்கும்,” என்கிறார்.

அதோடு படத்தோட கிளைமாக்ஸை யாராலும் யூகிக்க முடியாது என்று சவால் விடுகிறார்.

”ஒன்பதிலிருந்து பத்து வரை” படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சவாலில் ஜெயிக்க வாழ்த்துகள்.