படவெட்டு- விமர்சனம்
ஆழமான கருத்துக்களை அசால்டாக பேசுவதில் மலையாள சினிமாவிற்கு நிகரில்லை எனலாம். படவெட்டு என்றொரு படம். நிவின்பாலி ஹீரோ. ஹீரோவைச் சுற்றி கதை நிகழாமல் கதையைச் சுற்றி ஹீரோ நிற்கிறார். கதை?
முன்னொரு காலத்தில் ஓட்டப்பந்தய வீரரான நிவின்பாலி விபத்து ஒன்றில் சிக்கி காலில் காயத்தோடு திரிகிறார். அந்தக்காயத்தால் தன் வாழ்வில் நிறைய இழப்புகளைச் சந்தித்த அவர் சோர்வாகவே இருக்கிறார். அந்த நேரத்தில் அவரின் கிராமத்திற்குள் என்ட்ரியாகும் ஒரு அரசியல் கட்சி அங்குள்ள மக்களுக்கு சில ஆசைகளை தூவி அவர்களின் நிலத்தை கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதை உணரும் நிவின்பாலி அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்பதே படவெட்டு கதை
நிவின்பாலி இப்படியொரு கேரக்டரிலா? என வியக்கும் அளவில் நடித்துள்ளார். தொப்பையும் தொந்தியுமாக இந்தக் கேரக்டருக்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறார். வாழ்வில் தோற்றுப்போனவனின் முகபாவத்தை அப்படியே கொண்டுவந்துள்ளார். அதிதிபாலன் தன் அதி அழகான நடிப்பால் கவர்கிறார். அவருக்கும் நிவின்பாலிக்குமான ஒரு புரிதலுள்ள காதல் அழகாக காட்டப்பட்டுள்ளது. ஷம்மி திலகன் தன் அப்பா திலகனின் பெயரை காப்பாற்றும் அளவில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார்
தீபக்மேனெனின் ஒளிப்பதிவில் கடவுள் தேசம் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கிறது. நமது கோவிந்த் வசந்தா பின்னணி இசையில் மட்டுமின்றி பாடல்களிலும் அட்டகாசமாக ஈர்க்கிறார். கேரளா சினிமாக்காரர்கள் எடிட்டருக்கு மட்டும் நிறைய சுதந்திரம் கொடுப்பார்கள் போல.. படத்தின் நீளத்தைப் பற்றி கவலையே படுவதில்லை கேரள எடிட்டர்கள். படவெட்டு எடிட்டரும் அப்படியே
ஆதிக்க வர்க்கம் எப்படி எளியவர்களை மூளைச்சலவை செய்து தன் வசப்படுத்துகிறது என்பதை போல்டாகப் பேசியிருப்பதால் இயக்குநர் விஜு கிருஷ்ணாவை பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய எமோஷ்னல் படத்தில் முழுதாக கைகூடவில்லை. நிவின்பாலி கேரக்டர் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் வரமால் இருப்பதும் திரை எழுத்தின் பிழையே. சொல்ல வந்தவிசயத்தில் இன்னும் வீரியம் சேர்த்திருந்தால் படவெட்டு நறுக்குத் தெறித்தாற்போல் நம் மனதை வெட்டியிருக்கும்
3/5
#படவெட்டு #Padavettu