பார்க்கிங்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

பார்க்கிங் பிரச்சனையை மட்டுமல்ல, மனதில் ஈகோ பெரிதாக உருவெடுத்தால் எவ்வளவு இன்னல்கள் வரும் என்பதையும் சொல்கிறது இந்தப்படம்

சென்னையில் ஒரு வீட்டில் ஹரிஷ்கல்யாண் எம்.எஸ் பாஸ்கர் இருவரும் மேல் தளம் கீழ் தளம் என குடித்தனம் இருக்கிறார்கள். எந்தப் பிரச்சனையும் புகாத இரு குடும்பங்களின் வாழ்வில் பார்க்கிங் ஒரு புது பிரச்சனையாக உருவெடுக்கிறது. அதனால் இரு குடும்பங்கள் என்னென்ன கொடுமைகளைச் சந்திக்கிறார்கள்..முடிவில் யார் ஈகோ வென்றது? என்பதே படத்தின் கதை

ஓரளவு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்ற இமேஜை சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் கோட்டை விட்டாரோ என்று தோன்றியது. ஆனால் இப்படத்தில் அதைத் தக்கவைத்துக் கொண்டார். டீசன்ட்-ஆன கதையில் கதைக்குத் தேவையான பொறுப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் ஹரிஷ். எம்.எஸ் பாஸ்கர் எனும் நடிப்பு அரக்கர் இப்படத்திலும் எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். அவர் முகம் குரூரமாக மாறும் இடங்களில், “இந்தாளு என்னப் பண்ணப்போறானோ?” என்ற பயம் நமக்குள் எழுகிறது. இந்துஜா கச்சிதமாக நடித்துள்ளார். இவர்கள் தவிர, எம்.எஸ்.பாஸ்கர் மகள்& மனைவி கேரக்டர்களும் முத்திரை. படத்தின் வெற்றியில் முக்கால் பங்கு வகிப்பது நடிகர்களின் நடிப்பு

சாம்.சி.எஸ் தன் பின்னணி இசையில் அழுத்தம் சேர்த்துள்ளார். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஜிஜு சன்னி ஒளிப்பதிவை திறம்பட செய்துள்ளார். 2 மணிநேரம் 8 நிமிடத்துக்குள் இந்தப் படத்தை நறுக்கென வெட்டி ஒட்டியுள்ள எடிட்டருக்குப் பாராட்டுக்கள்

கதை எழுதும் போது கட்ஸ்-ஐ மனதில் வைத்து சீன் பிடித்துள்ளார் இயக்குநர். திரைக்கதை அவ்வளவு நேர்த்தியாக அமைந்துள்ளது. பார்க்கிங்& ஈகோ பிரச்சனை இவ்வளவு எக்ஸ்ட்ரீம் லெவலுக்குப் போகுமா? என்ற கேள்வி எழும் விதமாக இருக்கும் சில சீன்களை தவிர்த்திருக்கலாம். சில லாஜிக் பாயிண்ட்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்தப் பார்க்கிங் தரமான அவுட்புட் தான்
3.25/5