மூணு படங்கள் ரிலீசுக்கு ரெடியா இருக்கு : அட, யாருப்பா இந்த பப்ளிக் ஸ்டார்?

Get real time updates directly on you device, subscribe now.

durai sudhakar

ளைய தளபதி, புரட்சி தளபதி, சின்னத் தளபதி என தளபதிகளின் வேகம் குறைந்து போய், இப்போது பவர் ஸ்டார், கோல்டன் ஸ்டார், வின் ஸ்டார், கன் ஸ்டார், அனிமல் ஸ்டார் (என்ன சொல்லும் போதே மூச்சிரைக்குதா?) என ஸ்டார்களின் அணி வகுப்பு அதிகரித்து விட்டது. இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் ‘பப்ளிக் ஸ்டார்’.

இந்தப் பட்டத்தோடு வந்திருக்கும் துரை சுதாகரின் முதல் படமான ‘தப்பாட்டம்’ இந்த வாரம் அதுவும் விவேகம் படத்துடன் ரிலீசாகியிருக்கிறது.

அஜித் படத்துடனே மோதலா? என்று கேட்டால் ”சத்தியமாக தலயோடு மோதுகிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லீங்க, நானே தல அஜித்தோட ரசிகன் தான். அவர் படம் ரிலீசாகிற அன்னைக்கு நாம நடிச்ச படமும் ரிலீசானா நல்லா இருக்கும்னு ஆசைப்பட்டேன். அதோட அஜித் ரசிகர்களோட பார்வை என் மீதும் விழும்னு நெனைச்சேன். அதனால தான் விவேகம் ரிலீசான அன்னைக்கு படத்தை ரிலீஸ் செய்தோம். எதிர்பார்த்த மாதிரியே படம் நெறைய பேரோட கவனத்தை ஈர்த்திருக்கு’ என்று ரிலீசுக்கான காரணத்தை சொன்னார்.

‘பப்ளிக் ஸ்டார்’ பட்டம் கூட அவர் போட்டுக் கொண்டது இல்லையாம். அது டைரக்டரும், தயாரிப்பாளரும் நிஜ வாழ்க்கையில என்னோட சேவைகளைப் பார்த்துட்டு கொடுத்தது என்கிறார்.

தஞ்சாவூர் தாங்க நமக்கு சொந்த ஊர், ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றேன். வர்ற பணத்துல நெறைய பேருக்கு உதவிகளை சேவையா செய்றேன். அதையெல்லாம் டைரக்டரும், தயாரிப்பாளரும் நேர்ல பார்த்திருக்காங்க, அதைப் பார்த்திட்டு தான் இப்படி ஒரு பட்டத்தை அவங்களே எனக்கு கொடுத்தாங்க, விரும்பிக் கொடுத்த பட்டம், அதை எப்படி வேணாம்னு சொல்றதுன்னு நானும் ஏத்துக்கிட்டேன் என்றார்.

தப்பாட்டம் இந்த வாரம் தான் ரிலீசாகியிருக்கிறது. ஆனால் அதற்குள் அடுத்தடுத்து மூன்று படங்கள் நடித்து முடித்து விட்டார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். படப்பிடிப்பெல்லாம் முடிந்து விட்டது, ரிலீசுக்கு தயாரா இருக்கிற அந்தப் படங்களோட டைட்டில்கள் மட்டும் இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும் வரிசையாக ரிலீசாகுமாம்.

அடுத்தடுத்த தாக்குதல்களை சமாளிக்க தயாரா இருங்க ரசிக கண்மணிகளே..!