ராதிகாவின் மகள் ரயான் நடத்தும் ‘ராடான் குறும்பட விழா’
திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் அன்றும் இன்றும் கொடிப்கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது அம்மாவின் வழியில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகையாக அல்ல, ஒரு திரை வர்த்தக நிர்வாகியாக!
பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்த இவருக்கு விளையாட்டு மேலாண்மை துறையில் உள்ள ஆர்வத்தால் அந்த துறையிலே இங்கிலாந்து நாட்டில் உயர் பட்டம் பெற்றார். புலிக்கு பிறந்தது பூனையாக இருக்காது என்ற கூற்றுக்கு ஏற்ப, இவரும் தற்போது தனது தாயின் வழியிலே ஊடக துறையில் கால்பதிக்க வருகிறார்.
‘நியூ மீடியா டிவிஷன்’ என்ற ஒரு நிறுவனத்தை ராடன் டிவியின் உட்பிரிவாக தொடங்கி அதன் மூலம் பல்வேறு ‘யு டியூப்’ சானல்களை நிர்வாகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோ ஆகியவை இந்தப் பிரிவின் கீழ் இயங்கும். பெரிதும் போற்றப்பட்ட எண்பதுகளின் நடிகர்களின் சங்கமம் இவரது பொறுப்பில் தான் இயங்கியது. இவர் தற்போது தமிழ்த்திரை உலகிற்கு பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தும் விதத்தில் ‘ராடான் குறும் படவிழா’ ஒன்றை நடத்த இருக்கிறார்.
திரை உலகில் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று இளைஞர்களின் கனவை நிறைவேற்ற இந்தப் போட்டி நிச்சயம் உறுதுணையாக இருக்கும். எங்களது நிறுவனத்தில் திறமையான இளைஞர்களுக்கு என்றுமே சிவப்பு கம்பள வரவேற்ப்பு உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த குறும்பட விழா. இயக்குனர்கள் பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், படதொகுபாளர் இயக்குனர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து, போட்டியில் கலந்து கொள்ளும் சிறந்த குறும்படத்தை தேர்வு செய்வார்கள்.
டிசம்பர் 20 ஆம் தேதி, போட்டியில் கலந்து கொள்ள படங்களை அனுப்பும் கடைசி தேதியாகும்.
பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இறுதி சுற்று நடக்கும். இதில் வெற்றி பெறுவர்களுக்கு பரிசும், அவர்களது படைப்புக்கேற்ப பெரிய கௌரவமும், அங்கீகாரமும் தரப்படும். இது அவர்களது கலை பயணத்தில் பெரிதும் உதவும்’ என நம்பிக்கையுடன் கூறினார் ரயான்.