பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ‘ரணபலி’!

Get real time updates directly on you device, subscribe now.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது.

சபிக்கப்பட்ட நிலத்தையும் அதன் கதாநாயகனையும் அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளை தீவிரமான காட்சிகளுடனும் வலுவான கதை சொல்லலுடனும் படத்தின் கிளிம்ப்ஸில் காண முடிகிறது. குறிப்பாக, சர் ரிச்சர்ட் டெம்பிள் போன்ற அதிகாரிகளின் கீழ் திட்டமிட்டு வறட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளன.

ஹிட்லரின் இனப்படுகொலையை விட மோசமான கொலைகள், இந்தியாவின் பொருளாதார சுரண்டல் போன்ற வரலாற்று உண்மைகளை உணர்வுப்பூர்வமாகவும் வலுவாகவும் இந்த கிளிம்ப்ஸ் காட்டுகிறது. வலிமையான மற்றும் அதிரடியான புது தோற்றத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ’ரணபலி’ கதாபாத்திரத்தில் ரசிகர்களை ஈர்க்க உள்ளார்.

Related Posts
1 of 10

ராஷ்மிகா மந்தனா ’ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குறிப்பாக, நடிகர் விஜய் தேவரகொண்டா ரயில் பாதையில் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை குதிரையில் இழுத்துச் செல்லும் காட்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் ’ரணபலி’ திரைப்படத்தை டி-சீரிஸ் வழங்குகிறது. பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் பீரியட் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. 19ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவான இந்த கதை 1854 முதல் 1878 வரை நடந்த உண்மையான வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்டமான பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது.

‘ரணபலி’ திரைப்படம் 1850களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த சம்பவங்களை நீங்கள் வரலாற்று புத்தகங்களில் காண முடியாது. 1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டது. அந்த சம்பவங்கள் மற்றும் தவறாக பழிசுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றை இந்தப் படம் பேசும். இது ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. பாடநூலில் இடம்பெற்ற வரலாற்றை மீண்டும் சொல்லும் முயற்சியும் அல்ல. பல உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள் மற்றும் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு மறைக்கப்பட்ட காலத்தை சினிமா வடிவில் மீள் உருவாக்கம் செய்வது தான் ‘ரணபலி’.

‘டியர் காம்ரேட்’, ‘குஷி’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. ’டாக்ஸிவாலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இணையும் இரண்டாவது படம். மேலும், ‘கீத கோவிந்தம்’ மற்றும் ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் ஜோடி சேரும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.