யார் சிங்கப்பெண் ? எனக் கேட்ட ஷில்பா மஞ்சுநாத்!
JSB Film Studios சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் எழுதி இயக்க, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் ஆர்த்தி நடிப்பில், பெண் குழந்தைகள் விளையாட்டை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம் “சிங்கப் பெண்ணே”. விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் திரையிடல் நிகழ்வு நேற்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேசியதாவது..
உங்கள் முன்னால் மற்றும் ஒரு தமிழ்ப்படத்திற்காக மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் கதை சொன்னபோது யார் சிங்கப்பெண் ? எனக் கேட்டேன். கதை கேளுங்கள் உங்களுக்கு தெரியும் என்றார். கதை கேட்டு முடித்தவுடன் கதை தான் சிங்கப்பெண் என்பது புரிந்தது. எல்லோர் வீட்டிலும் ஒரு சிங்கப்பெண் இருப்பார்கள் இது அந்த மாதிரியான ஒரு சிங்கப்பெண்ணை பற்றிய படம். முழுக்கதையும் சொல்லி ஆறு மாதம் வேண்டும் என்றார் இயக்குநர். படத்தின் கருத்து பிடித்திருந்ததால் உடனே ஒத்துக்கொண்டேன். படத்தின் படப்பிடிப்பில் செட் செய்து, ஷீட் செய்வார்கள் என நினைத்தேன், ஆனால் உண்மையான போட்டிகளை நடத்தி அப்படியே எடுத்தார்கள். ஆர்த்தி எந்த ஒரு சிறு ஓய்வும் இல்லாமல், மிக உற்சாகமாக பணியாற்றினார். அவரைப் பார்த்து பிரமித்து விட்டேன். இந்தப்படத்தில் நிறையக் கற்றுக்கொண்டேன். பெண்களின் விளையாட்டைப் பற்றி நாம் நிறைய பேசுவதில்லை, அதற்கான இடம் இங்கு வேண்டும். எல்லோரும் ஆதரவைத் தர வேண்டும். அதைப்பற்றி இந்தப்படம் பேசும். ஆதரவு தாருங்கள் நன்றி.
இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் ஆர்த்தியின் கோச்சராக நடித்திருக்கிறார். மறைந்த பழம்பெரும் வில்லன் நடிகர் M.N.நம்பியார் அவர்களின் பேரன் தீபக் நம்பியார் இத்திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் பசங்க சிவகுமார், A.வெங்கடேஷ், சென்ராயன், பிரேம், பாய்ஸ் ராஜன், ஜானகி, இந்துமதி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். முக்கிய அம்சமாக இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரகனி அவர்கள் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.