கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன்-விஜய் சேதுபதி!
SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சார்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில் நடிகர் விமல் பேசும்போது,
போஸ் மாமா கதை சொல்ல வந்தார், எனக்கு ரொம்ப பிடித்தது. வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்கு நல்ல படம் தந்துள்ளார். அவரே நடித்து காட்டி, தான் நடிக்க வைப்பார், அருமையாக படத்தை எடுத்துள்ளார். இன்று வாழ்த்த வந்துள்ள வெற்றிமாறன் சார், அவர் இந்த படத்திற்குள் வந்த பிறகு தான், இப்படம் முழுமையான சார் ஆகியிருக்கிறது நன்றி. என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி, நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம், என்னை போன் செய்து, உற்சாகப்படுத்துவார், அவரால் தான் நான் இப்போது கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்துள்ளேன் நன்றி. நட்டி அண்ணன் இந்த விழாவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்தில் சரவணன் சார் அற்புதமாக நடித்துள்ளார். எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி’ என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,
இன்று தான் விமல் மிக நன்றாக பேசியிருக்கிறார். கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன், அப்போது அவர் நடிப்பதை ரசித்துப்பார்ப்பேன். இந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும், போஸ் வெங்கட்டை டீவி சீரியல் நடிக்கும் காலத்திலிருந்து தெரியும். அவர் அப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டே நடித்துக்கொண்டிருந்தார், அதிலேயே தங்கி விடாமல், சினிமாவுக்கு வந்து, இப்போது இயக்கம் என தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக்கொண்டே செல்கிறார். விடுதலை பட ஷூட்டிங் சமயத்தில், அரசியல் புத்தகங்கள் படித்துக்கொண்டிருப்பார். அவருடன் அரசியல் பேசும்போது அவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்வார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக காத்திருக்கிறேன். இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். இந்த காலத்திற்கு தேவையான விசயத்தைப் பேசியிருக்கிறார். சரவணன் மிக அருமையாக நடித்துள்ளார். படத்தை முழுதாக பார்த்து விட்டேன், கடைசி 40 நிமிடம் படம் உங்களை உலுக்கி விடும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என்றார்.
‘கன்னிமாடம்’ மூலம் இயக்குநராக கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி அருமையான கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக, சார் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ் ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது. ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டு வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.