சிறை- விமர்சனம்

ரசிகர்களின் பணத்தையும் நேரத்தையும் மதித்து ஒரு படம் வெளி வந்துள்ளது
டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் தன் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை கதை, திரைக்கதையாக்கியுள்ளார். கதைப்படி, ஹீரோ விக்ரம்பிரபு ஒரு சிறைக்காவலர். நீதிமன்ற வாய்தாவிற்காக கொலைக்குற்றவாளியான அக்ஷய்குமாரை அழைத்துச் செல்கிறார். வேலூர் டூ சிவகங்கை நோக்கிய அவர்களின் அரசுப்பேருந்து பயணத்தில் நடக்கும் சம்பவங்களும், அக்ஷய்குமார் யாரை கொலை செய்தார் என்பதற்கான பதிலும் தான் படத்தின் திரைக்கதை
விக்ரம் பிரபு கரியரில் டாணாக்காரனுக்குப் பிறகு ஒரு தரமான படமிது. மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இயலாமையை வெளிப்படுத்தும் நீதிமன்ற காட்சிகளில் அவர் கொடுத்திருக்கும் பெர்பாமன்ஸ் தரம். அறிமுக நாயகன் அக்ஷய்குமார் முதல்படம் என்ற சாயல் துளியுமின்றி பின்னியெடுத்துள்ளார். நாயகி அனிஷ்மா அனில்குமார் இரண்டாம் பாதியில் மிகச்சிறந்த நடிப்பால் நம் மனதில் பதிகிறார்.நாயகியின் அக்கா, அக்கா கணவரின் நடிப்பும் அட்டகாசம். குட்டி கேரக்டர் என்றாலும் விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் நாயகியும் சூப்பர் தேர்வு
இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் படத்தின் மற்றொரு ஹீரோ எனலாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் உயிர்ப்போடு இருப்பதற்கு அவரின் பின்னணி இசை பெருங்காரணம். மதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மிகத்துல்லியமாக அமைந்துள்ளது. விக்ரம் பிரபுவின் ஓப்பனிங் கன்ஷாட்-ஐ அவர் எடுத்திருந்த விதம் மாஸ் One. பிலோமினின் கிரிப்பான எடிட்டிங் படத்திற்கு கூடுதல் பலம்
ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அதிர்வை வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. வசனங்களை அதீத அக்கறையோடு எழுதியுள்ளார் தமிழ். ஹீரோக்கள் இருவர் பெரிதாக பங்கு கொள்ளாத காட்சிகள் கூட அவ்வளவு அழுத்தமாக அமைந்துள்ளது. உதாரணத்திற்கு பின்பாதியில் வரும் போலீஸ்டேசன் காட்சியைச் சொல்லலாம். மேலும் அக்கா தங்கை செண்டிமெண்ட் காட்சி ஒன்றிலும் அவ்வளவு உயிரோட்டம்
சிறை- நிறை
4/5