சுந்தர்.சி சொல்வதை கேட்பதா ? அமீர் சொல்வதை கேட்பதா ?” -நடிகர் விஜய் விஷ்வா !

மனோன்மணி கிரியேஷன்ஸ் சார்பில் பி லலிதா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தாரணி’. இயக்குநர் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக மாரி நடிக்க கதாநாயகியாக அபர்ணா மற்றும் விமலா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் ஆனந்த், இலக்கியா, இம்ரான், சசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு காயத்ரி குருநாத் இசையமைத்துள்ளார். வெங்கடேஷ் மாவேரிக்’ ஒளிப்பதிவு செய்ய, நவீன் சுந்தர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கல் சுப்பிரமணிய சிவா, கேபிள் சங்கர், இசையமைப்பாளர் தாஜ்நூர், நடிகர் விஜய் விஷ்வா, சின்னத்திரை நடிகர் கமலேஷ் மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டுடன் கூடவே இந்த படக்குழுவினரின் அடுத்த படமாக உருவாக உள்ள என் திரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது..
இந்த நிகழ்வில் நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,
“இயக்குநர் தைரியமாக ஒரு விஷயத்தை இதில் சொல்லியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் இதில் கலந்து கொள்ளாமலேயே தனது நண்பனுக்காக இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார் என்றால் மிக அற்புதமான நண்பரை இயக்குனர் ஆனந்த் பெற்றுள்ளார். இப்படிப்பட்ட நண்பர்கள் தயாரிப்பாளர்கள் ஆக கிடைக்கும்போதுதான் மிகுந்த சுதந்திரம் கிடைக்கும். இந்தப் படத்திற்கு ஒரு பெண் விஎஃப்எக்ஸ் பணிகளை செய்துள்ளார், ஒரு பெண் இசையமைத்துள்ளார் என்பது மிகப்பெரிய ஆச்சர்யம்.. பெண்கள் இன்று மேல்நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. நான், யோகி பாபு, ரோபோ சங்கர் நடித்திருக்கிறோம். அடுத்ததாக பிரம்ம முகூர்த்தம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. டைம் மேனேஜ்மென்ட் என்பது சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ரொம்பவே முக்கியமானது. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அது எங்கே போய் முடியும் என்று சமீபத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில காலதாமதத்தினால் 41 பேர் இறந்தும் போயிருக்கிறார்கள்.. அதனால் நமக்கு கிடைக்கிற நேரத்தில், கிடைக்கும் விஷயத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பேயை வைத்து படம் எடுத்தால் வெற்றி என சுந்தர்.சி சொன்னதாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா சொன்னார். சமீபத்தில் இயக்குநர் அமீர் பேசும்போது, கண்ணுக்குத் தெரியாத சாமியையும் பேயையும் வைத்து படம் எடுப்பதற்கு பதிலாக கண்ணுக்குத் தெரியும் சாதியை வைத்து படம் எடுங்கள் என்று சொன்னார். இதில் எது சரி என்று எனக்கு தெரியவில்லை. அதனால் போகிற போக்கில் நமக்கு எது சரி என்று தெரிகிறதோ, பாசிட்டிவாக இருக்கிறதோ அதை எடுத்து கொள்வதுதான் நல்லதாக இருக்கும். சிறிய, பெரிய ஹீரோக்கள் அனைவரின் படங்களுக்கும் ஒரே டிக்கெட் தான். ஆனால் விளம்பரங்களை பொறுத்துதான் அவை சிறிய படங்களா, பெரிய படங்களா என்பது முடிவாகிறது” என்று பேசினார்.