சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிய ‘நாங்கள்’!
ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவினரை பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ள ‘நாங்கள்’ திரைப்படம் லைவ் சவுண்ட் முறையில் முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது
திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றி இருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘நாங்கள்’.
கலா பவஸ்ரீ கிரியேஷன்ஸ் பேனரில் ஜிவிஎஸ் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கி இருப்பதோடு இதன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் அவினாஷ் பிரகாஷ் கையாண்டுள்ளார்.
மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான ‘நாங்கள்’, ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் உளப்பூர்வ பாராட்டுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும் ‘நாங்கள்’ திரைப்படத்தை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன் சார்பில் எஸ் சுப்பையா ஏப்ரல் 18 அன்று வெளியிடுகிறார்.
படம் குறித்து பேசிய இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், “பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள். ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்,” என்றார்.