தமிழாற்றுப்படை வரிசையில் வைரமுத்து அரங்கேற்றும் தொல்காப்பியர்!
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.
தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி வருகிறார்.
இதுவரை திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – கம்பர் – அப்பர் – திருமூலர் – ஆண்டாள் –– வள்ளலார் – மறைமலையடிகள் – உ.வே.சாமிநாதையர் – பாரதியார் – பாரதிதாசன் – புதுமைப்பித்தன் – கலைஞர் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது இவரது 16ஆவது கட்டுரையாகும்.
தமிழ் நூல்களில் மிகப் பழைமையானதும், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமாக அறியப்படுவதும் தொல்காப்பியம்தான் என்றும், இன்றுவரைக்குமான தமிழ்மொழி தொல்காப்பியத்தின் மீதுதான் நிலைபெறுகிறது என்றும், அது வடமொழிச் சார்பான வழிநூல் அல்ல தமிழில் தோன்றிய முதனூல் என்றும் தன் ஆய்வுக் கட்டுரையில் ஆதாரங்களோடு நிறுவியிருப்பதாகக் கவிஞர் வைரமுத்து சொல்கிறார்.
மே 2 புதன்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை அடையாறு சிவாஜி நினைவு மண்டபத்திற்கு அடுத்துள்ள ராஜரத்தினம் கலையரங்கில் விழா நடைபெறுகிறது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் தலைமை ஏற்கிறார். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக உரை ஆற்றுகிறார்.
வெற்றித்தமிழர் பேரவையைச் சேர்ந்த வி.பி.குமார், வெங்கடேஷ், ராஜசேகர், தமிழரசு, செல்லத்துரை, மாந்துறை ஜெயராமன், காதர்மைதீன், சண்முகம் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.