போலாம் ரைட்… சாந்தினியுடன் ‘வண்டி’யைக் கிளப்பினார் விதார்த்!

நடிக்கின்ற படங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அந்தப்படங்கள் மனசுக்கு நிறைவைத் தர வேண்டுமென்கிற எண்ணத்தில் தேர்ந்தெடுத்து படங்களை நடித்து வருகிறார் விதார்த்.
”காக்கா முட்டை” புகழ் மணிகண்டன் இயக்கத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ”குற்றமே தண்டனை” படத்தைத் தொடர்ந்து விதார்த்து நடிக்கும் புதிய படம் தான் ”வண்டி”.
ரூபி பிலிம்ஸ் ஹஷீர் வழங்கும் விதார்த் நடிக்கும் ”வண்டி” ”Journey With Duttu” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜேஷ் பாலா எழுதி இயக்கும் இப்படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகனின் நண்பனாக கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.
தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரமேற்று நடித்து வரும் ஜான்விஜய் இப்படத்தில் எஸ்.ஐ யாக முக்கிய காதபாத்திரமேற்று நடித்துள்ளார். ”சூது கவ்வும்” போன்ற பல்வேறு படங்களின் மூலம் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த நடிகர் அருள்தாஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கணேஷ் பிரசாத் இரண்டாம் கதாநாயகனாக நடிக்க நகைச்சுவை காட்சிகளில் கலக்க ”லொள்ளு சபா” சாமிநாதனும், மதன் பாபுவும் ஒன்று சேர்கிறார்கள்.
ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு சுராஜ் எஸ்.குரூப் இசையமைக்க ரீசால் ஜெய்னி படத்தொகுப்பை கவனிக்கிறார்.
டைட்டிலுக்கேற்ப வண்டி முக்கிய கேரக்டராக வரும் என்கிற எதிர்பார்ப்போடு காமெடி த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.