சங்கத்தின் பெயரில் சமாதான பேச்சுவார்த்தை வேண்டாம் : தாணுவின் முடிவுக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு
நடிகர் சங்கத் தேர்தலில் ‘தயாரிப்பாளர் சங்கம்’ என்கிற பெயரில் கலைப்புலி எஸ்.தாணு எடுக்கும் சமாதான முயற்சி முடிவுக்கு சக தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடில்லை என்றும், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றும் தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :
நடிகர் சங்கத்தேர்தல் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாருக்கு ஆதரவான ஒரு நிலையில் ‘சமரச பேச்சு’ என்கிற பெயரில் தேர்தலைத் தவிர்க்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்.. தயாரிப்பாளர் சங்கம் என்கிற பெயரில் அவர் எடுக்கும் இம்முடிவு நல்ல முடிவல்ல. இது அவரது தன்னிச்சையான,தனிப்பட்ட முடிவாகும்.
நடிகர் சங்கத்தேர்தலில் போட்டி போட்டிதான் என்றும் போட்டியிலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் விஷால் கூறிவிட்டார். அப்படியிருக்க தாணுவின் இம்முயற்சி தேவையில்லாதது மட்டுமல்ல முறையற்றதும் கூட. தேர்தல் நீதிமன்றத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இப்படித் தேர்தலைத் தவிர்க்கும் முயற்சி நீதிமன்றத்திற்கு எதிரானதும் கூட.
பொதுவாக எந்த சங்கத்தின் தேர்தல் நடவடிக்கையிலும் இன்னுனொரு சங்கம் தலையிடக் கூடாது என்பது தான் சங்கவிதியாகும். சினிமா துறையில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. எல்லாமே இப்படிப்பட்ட தலையீடு எதுவும் இல்லாமல்தான் சுதந்திரமாகத் தேர்தல்களை நடத்துகின்றன.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் சரத்குமார், தாணுவுக்கு தனிப்பட்ட முறையில் தான் ஆதரவு கொடுத்தார். விருப்பம் இருந்தால் சரத்துக்கு தாணு தனிப்பட்ட முறையில் ஆதரவு தருவதாக அறிவிக்கட்டும்.
அதற்கு சங்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது. இப்படி ஒரு முடிவெடுக்க யாரையும் கலந்து ஆலோசிக்காமல் பொதுக்குழு செயற்குழு கூட்டாமல் எடுப்பது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும். முறையாக நடத்தும் தேர்தலில் இப்படி செய்வது ஏதோ தயாரிப்பாளர் சங்கமே துணை நிற்பது போல ஒருதோற்றத்தை உண்டாக்கும் இது தவறான தாக்கத்தை உண்டாக்கும்.
அது மட்டுமல்ல வருங்காலத்தில் இது தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நல்லுறவைக் கெடுக்கும். தேவையற்ற கசப்பான பின் விளைவுகளை உண்டாக்கும்.
தயாரிப்பாளர்களுக்கு எல்லா நடிகர்களும் தேவை அவர்களைப் பிளவுபடுத்தக் கூடாது. ஒருதலைப் பட்சமாக இப்படிப்பட்ட முயற்சியில் தயாரிப்பாளர் சங்கமும் ஈடுபடக்கூடாது. பொதுவாகவே ஒரு சங்கத்தின் தேர்தல் விவகாரத்தில் இன்னுனொரு சங்கம் தலையிடக் கூடாது என்பது மரபு. சங்கத்தில் எந்த முடிவாக இருந்தாலும் அனைவரையும் கூட்டி கலந்து பேசிவிட்டுதான் முடிவெடுக்க வேண்டும்.
தாணு எற்கெனேவே எடுத்தமுடிவு தவறானது என்று தெரிந்ததும் மாற்றிக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட ஒருநாளில் படங்கள் வெளியாகாது என்று அறிவித்தார் ஆனால் அருண்பாண்டியனும், விஷாலும் அதே தேதியில் படங்களை வெளியிடுவதாக அறிவித்தனர். பிறகு தாணு தான்எடுத்தமுடிவு தவறானது என்று தன் முடிவை மாற்றிக் கொண்டார். ஒரு படம் வெளியிடக்கூடாது என்று சொல்வது எளிது அதில் தயாரிப்பாளர்களுக்கு உடன் பாடு இருக்காது. ஏனென்றால் எடுத்த படத்தை வெளியிடும் கட்டாயத்தில்தான் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
ஏற்கனெவே இந்த நடிகர் சங்கத்தேர்தலில் எவ்வளவோ அரசியல் நடந்திருக்கிறது.. அப்போது கூட இன்னொரு சங்கம் தலையிட்டதில்லை.
நானும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்தான். விநியோகஸ்தர்சங்கம்மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் பொறுப்பில் இருந்திருக்கிறேன்.இந்த40ஆண்டு சரித்திரத்தில் ஒரு சங்கத்தில் இருக்கும் போது இன்னொரு சங்கத்தில் தலையிட்டது இல்லை. எனவே இந்த தாணுவின் முடிவு முழுக்க முழுக்க அவரவது தனிப்பட்ட முடிவாகும் இதில் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு உடன்பாடு இல்லை.
இதுபற்றி நான்விளக்கம் கேட்க முயற்சிசெய்த போது தயாரிப்பாளர் சங்கத்தினர் யாரும் தொடர்பில் வரவில்லை. எதுவாக இருந்தாலும் அனைவரையும் கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
நடிகர் சங்கத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மாலை போட்டு வரவேற்போம். தயாரிப்பாளர்களுக்கு எல்லா நடிகர்களும் வேண்டும். இவ்வாறு ஏ.எல் அழகப்பன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நாளை சமாதானப்பேச்சு வார்த்தை நடக்கும் என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஏற்கனவே தெரிவித்த நிலையில் சங்கத்தில் இருக்கிற சக உறுப்பினர்களே அவரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.
இதனால் திட்டமிட்டபடி நாளை மறுநாள் சமாதானப் பேச்சு வார்த்தை நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.