தமிழ் தெரிஞ்சவங்களே இங்கிலீஷ்ல பேசினா என்ன அர்த்தம்? : தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ஆதங்கம்

Get real time updates directly on you device, subscribe now.

abirami

வெளிநாட்டு வாழ் இந்தியரும், ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தியும் வருபவர் கொட்டீஸ்வர ராஜு. இவரது மனைவி ஹேமா ராஜு.

இருவரும் சேர்ந்து ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இர்ஃபான், தீக்ஷிதா , ஜெயப்பிரகாஷ் , ஒய் ஜி மகேந்திரன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘ஆகம்’ . (ஆகம் என்றால் வந்தடைதல் என்று பொருள்)

விகடன் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்றாக பாராட்டப்படும் ‘ஒரு சிறகு போதும்’ என்ற நூலை எழுதியவரும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தியவருமான டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கதை எழுதி படத்தை இயக்கி இருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய அபிராமி ராமநாதன் “என்னை பேச அழைக்கும் போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெண்மணி நடிகர் என்று சொல்லி அழைத்தார். அது தப்பில்லை. நான் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன் .

‘தியாக பூமி’ உள்ளிட்ட மாபெரும் படங்களை இயக்கிய கே.சுப்பிரமணியம் இயக்கிய நேரு பற்றிய ஒரு சிறு படத்தில் நான் நடித்தேன். அப்போது என் வயது எட்டு. படத்தில் ஒரு காட்சியில் நேருவாக நடிப்பவரின் கையை நான் பிடித்துக் கொண்டு நடக்க, அடுத்து ஓர் ஐந்து வயது சிறுமி, என் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும்.

இந்தக் காட்சியைப் பார்த்த என் ஆத்தா (அம்மா), ‘என்ன இவன்… இந்த வயசுலேயே பொம்பளப் புள்ள கையைப் பிடிச்சுகிட்டு நடக்குறான். இனிமே இவன நடிக்க விடக் கூடாது’ன்னு சொல்லிருச்சு. அப்புறம் நடிக்க விடவே இல்ல. என்னை மட்டும் என் ஆத்தா நடிக்க விட்டிருந்தா நான் பெரிய பெரிய நடிகர்களுக்கு எல்லாம் போட்டியா வந்திருப்பேன்.

அப்புறம் தியேட்டர் ஆரம்பிச்சேன். பட விநியோகம் பண்ணினேன். படம் தயாரிக்க ஆரம்பிச்சேன். இப்போ கூட ஒரு படம் தயாரிச்சுக்கிட்டு இருக்கேன்.

என்கிட்டே நாலு தியேட்டர் இருக்கு. ஒவ்வொரு படமும் ரெண்டு வாரம் ஓடினாலே எனக்கு ஒரு தியேட்டருக்கு வருஷம் 26 படம் வேணும். நாலு தியேட்டருக்கும் 104 படம் வேணும் . அதனால்தான் என் தியேட்டருக்கு படத்துக்கு வர்ற டிக்கெட் புக் பண்றவங்களுக்கு கார் வசதியும் அதுக்குரிய சார்ஜ் வாங்கிட்டு பண்ணித் தர்றேன்.

இப்படிப்பட்ட நிலையில் ‘ஆகம்’ மாதிரி படங்கள் நல்லா ஓடினா அது பல வெற்றிப் படங்களை உருவாக்க வழி செய்து கொடுக்கும். இதையெல்லாம் ஏன் சொல்றேன்னா சினிமா தொழிலுக்கு வந்துட்டா அப்புறம் அந்த தொழிலை விட்டுப் போக யாருக்கும் மனசு வராது. இந்தப் படங்கள்ல பல புதுமுகங்களும் நடிச்சு இருக்காங்க. அவங்க எல்லாம் ஜெயிக்கணும்னா இந்தப் படம் நல்லா ஓடணும்.

இந்த நேரத்துல ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். இந்தப் படத்துல நடிச்ச நடிகைகள் எல்லாம் இங்க பேசினாங்க. ஆனா எல்லாரும் ஆங்கிலத்துலேயே பேசறாங்க. அது ஏன்? பம்பாய்ல இருந்தும் ஃபாரின்ல இருந்தும் வந்த நடிகைன்னா, தமிழ் தெரியாது அவங்க தமிழ்ல பேசலன்னா பரவால்ல, ஆனா தமிழ் தெரிஞ்சவங்களே ஆங்கிலத்துல பேசறீங்களே. அது ஏன் ?

நிகழ்ச்சித் தொகுப்பு பண்ற பொண்ணு எவ்வளவு அழகா சேலை கட்டி வந்திருக்கு. ஆனா நீங்க எல்லாம் எதையோ மாட்டிக்கிட்டு வந்தது ஏன்? சேலை கட்டி வந்தா என்ன ? இனியாவது நடிகைகள் நிகழ்ச்சிகளில் தமிழ்ல பேசுங்க” என்றார்.