ஆத்யன் – விமர்சனம்

Rating : 1.9/5
ஜப்பானில் செட்டிலாகியிருக்கும் தமிழரான அபிமன்யூ நல்லமுத்துவுக்கு ஒரு தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான் லட்சியம்.
அவருக்கு ஃபேஸ்புக் மூலம் நண்பராகிறார் கதாநாயகி சாக்ஷி அகர்வால். தமிழ்ப்பெண்ணான அவரிடம் முதலில் நட்போடு பேச ஆரம்பிக்கிறவர் பிறகு காதலில் விழுகிறார்.
திருமணம் செய்கிற முடிவோடு காதலியைத் தேடி சென்னை வரும் அவர் ஜெட் லாக் என்ற தூக்க நோயினால் அவ்வப்போது தூங்கி தூங்கி விழுகிறார்.
இதனால் தனது காதலியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட, சாக்ஷி அகர்வாலும் நல்லமுத்துவை சந்தேகிக்கிறார்.
இந்த சூழலில் பால்ய கால நண்பர்களான ஜெனீஷ், மகேஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சந்திரன் மூவரும் சென்னையில் போதை மருந்து கடத்தல் தொழிலைச் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த போதை மருந்து கடத்தல் விவகாரம் போலீசுக்குத் தெரிய வர, அந்த தொழிலைச் செய்யும் ரெளடியான ஜெனீஷை போலீஸ் சுற்றி வளைக்கிறது.
அதிலிருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று திட்டம் போடும் அவர்கள் அபிமன்யூ நல்லமுத்துவை அந்த போதைக் கடத்தில் வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் முயற்சி பலித்ததா? தனது காதலியை நல்லமுத்து சந்தித்தாரா இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
பரபரவென்று ஒரு திகில் பட ரேஞ்சில் ஆரம்பிக்கிறது படம்.
”பார்த்து சார்.., நீங்க தங்கியிருக்கிற வீட்ல ஒரு பொண்ணு தூக்கு போட்டு தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க” என்று ஹீரோவுக்கு எச்சரிக்கை வரவும் ஒரு திகில் பட ரேஞ்சில் நகர்கிறது காட்சிகள்!
ஆனால் ஹீரோ அபிமன்யூ நல்லமுத்துவுக்கு ‘ஜெட் லாக்’ என்ற தூக்க நோய் இருக்கு என்று டாக்டர் சொல்லவும் தியேட்டரில் ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதைச்சுற்றி நகரும் வலுவில்லாத திரைக்கதையின் போக்கால் அடுத்தடுத்த காட்சிகளின் சுவாரஷ்யம் வெகுவாக குறைய ஆரம்பித்து விடுகிறது.
ஏனென்றால் இதுபோன்ற பெயர் தெரியாத நோய்களைப் பற்றி விளக்கும் படங்களை எத்தனையோவற்றை அவர்கள் பார்த்து நொந்தவர்கள் ஆயிற்றே…
அறிமுக நாயகன் அபிமன்யூ நல்லமுத்து ஒரு வாட்டசாட்டமான இளம் ஹீரோவாக வருகிறார். நடிப்பில் இன்னும் கொஞ்சம் தேர்ச்சி பெற்றால் கோலிவுட்டில் அவருக்கும் ஒரு சிறிய இடம் கிடைக்கலாம்.
கதாநாயகியாக வரும் சாக்ஷி அகர்வால் பஞ்சாப் வரவு போல கொழுக் மொழுக் என்றிருக்கிறார். கவர்ச்சிக்கே தயாராக இருப்பவரை கன்னியமாக காட்டிய இயக்குநர் அவருக்காக காட்சிகளையும் குறைத்திருக்கிறார்.
‘ஆத்யன்’ என்றால் தமிழில் எல்லாம் அறிந்தவன் என்று அர்த்தமாம். இந்தப்படம் வெற்றியா? இல்லையா? என்பதையும் அவர் மூளைக்கே விட்டு விடலாம்!