டெலிவரி பாய் படவிழாவில் ராதிகா குறித்து லியோனி பேச்சு
நேற்று சென்னையில் டெலிவரி பாய் பட நிகவழ்வில் கலந்து கொண்டு
திண்டுக்கல் லியோனி பேசியதாவது,
“முதலில் இந்தப் படத்தைச் சரியான நேரத்தில் தயாரித்து எங்களுக்குப் பக்கபலமாக நின்ற எனது அன்புச் சகோதரர் மாதேஸ்வரனுக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘உடுக்கை இழந்தவன் கைபோல’ என்ற திருக்குறளுக்கு உதாரணமாக, இக்கட்டான நேரத்தில் உதவிக்கு வந்த உண்மையான நண்பர் அவர். இயக்குநர் நானிக்கும் லியோ சிவக்குமாருக்கும் இடையே இருக்கும் புரிதலும், அவர்களது நீண்டகால உழைப்பும்தான் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
ஒரு தாய் தனது மகனுக்குச் சொல்லும் வார்த்தைகள் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்தப் படத்தில் இயக்குநர் நானி அழகாகக் காட்டியிருக்கிறார். ராதிகா சரத்குமார் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் உயிராக அமைந்துள்ளது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. நடன இயக்குநர் மனோஜ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு, இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக சண்டைக்காட்சிகளும் அவற்றுக்கான பின்னணி இசையும் மிகவும் அருமையாக உள்ளன. துஷ்யந்த், பிரிகிடா உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். லியோ சிவக்குமார் நடிகராக மட்டுமல்லாமல், படத்தின் தயாரிப்புப் பணிகளிலும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார். ஒரு தந்தையாகவும், இந்தப் படத்தின் ரசிகனாகவும் அவரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

எனது அன்புச் சகோதரர் கண்ணன் ரவி, பலருக்கும் உதவி செய்து வருபவர். எனது குடும்பத்திற்குத் தேவைப்பட்ட மருத்துவ உதவியைக்கூட சரியான நேரத்தில் செய்து கொடுத்தவர். அவரைப் போன்ற மனிதர்களின் அன்பும் ஆதரவும் எங்களுக்குப் பெரிய பலம். இந்தப் படத்தின் மையக்கருத்து நன்றி மறக்காமல் வாழ வேண்டும் என்பதுதான். ஒருவரிடம் உதவி பெற்றால், அதை நினைவில் வைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற அழகான கருத்தை இயக்குநர் நானி கதையின் வழியாகச் சொல்லியிருக்கிறார். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பண்பை வலியுறுத்தும் திரைப்படம் இது. பலருடைய உழைப்பில் உருவாகியுள்ள ‘டெலிவரி பாய்’ நிச்சயம் மிகப்பெரிய வெற்றிபெறும். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் படத்தின் நல்ல அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் ஆதரவில்தான் இந்தப் படத்தின் வெற்றி இருக்கிறது. நன்றி.”