ஹீரோக்கள் மட்டும் தான் அடிப்பார்களா என்ன? : கதைக்காக மொட்டையடித்துக் கொண்ட பியா பாஜ்பாய்!
வழக்கமாக ஒரு படமென்றால் அதில் நடிக்கிற ஹீரோ தான் தன்னுடைய கேரக்டருக்காக அதிக ரிஸ்க் எடுப்பார்கள். ரொம்ப மெனக்கிடுவார்கள்.
ஆனால் இப்போது ஹீரோயின்கள் கூட தாங்கள் நடிக்கப்போகிற கேரக்டர்களுக்காக மெனக்கிட ஆரம்பித்து விட்டார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகிணி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’.
இந்தப் படத்துக்காக நாயகி பியா பாஜ்பாய் நிஜமாகவே மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார். அப்படி என்ன அவசியம் என்று பியாவிடம் இந்தப் படம் குறித்துக் கேட்டபோது :
இந்த படமும் இந்தக் கதாபாத்திரமும் எனக்குக் கிடைத்ததை மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனர் விஜயலட்சுமி எனக்கு போன் பண்ணி கதையைச் சொன்னபோது அது என்னை மிகவும் கவர்ந்தது, அதனால் இதில் நடிக்க உடனே ஒப்புக் கொண்டேன்.
எனக்கு மட்டும் இல்லாமல், எந்த ஒரு நடிகைக்கும் இது போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிதான விஷயம், அதனாலேயே இப்படத்தில் நடிக்க உடனே ஒப்புக்கொண்டேன்.
இக்கதையின் ஒரு பகுதிக்காக நான் மொட்டையடிக்க வேண்டியது இருந்தது. இயக்குனர், ‘அதற்குரிய விசேஷ மேக்-அப் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி தலையை மொட்டை அடித்தது போன்று காட்டிக் கொள்ளலாம்’ என்றார்.
கதைக்கு உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்றால் நான் நிஜமாகவே மொட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்றேன். அதற்கு அவர், ‘எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் எந்தப் பெண், அதுவும் நடிகை சம்பதிப்பார் என்றுதான் தயங்கினேன்’ என்றார்.
தோற்றத்தையும் மீறி ஒரு நல்ல நடிகை எனப் பெயர் வாங்க முடியும் என்று நம்புபவள் நான். அதனால் துணிந்து மொட்டை அடித்துக் கொண்டேன். இந்தத் துணிச்சலான, அழகான காதல் கதையை ரசிகர்கள் மிகவும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் பியா.