எந்தப் படத்தை பார்க்கிறதுன்னு ரசிகர்கள் குழம்பிப் போயிருக்காங்க… : நாசருக்கு வந்த கவலை!
புதுமுக இயக்குநர் மனோன்.எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டைட்டிலிலேயே ‘கா..கா..கா..’ ஆபத்தின் அறிகுறி என்று போட்டுள்ளார்கள்.
இயக்குநர் மனோன் ஒரு பெங்களூர் தமிழர். இவர் ‘இருவர் மட்டும்’ ராகவன், பி.வாசு, வெற்றிமாறன் ஆகிய பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளவர்.
பொதுவாக காகம் கத்தினால் விருந்தினர் வரவின் அறிவிப்பு என்று நம்பப்படுகிறது. இப்படத்தில் ஆபத்து வரும் அறிகுறியாக காகம் கத்துகிறது. படத்தில் காகம் ஒரு பாத்திரம் போலவே வருகிறது.
அசோக், மேகாஸ்ரீ, நாசர், ஜெயசுதா, யோகிபாபு நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பங்ஷன் நேற்று காலை சென்னையிலுள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடந்தது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் ட்ரெய்லரை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் நாசர் பேசும் போது : ”புதுமுக இயக்குநர்கள் படம் பண்ணும் போது கனவோடு வருகிறார்கள். அவர்களை நான் ஆதரிக்கத் தயங்குவதில்லை. இந்த மனோன் என்னிடம் நடிக்கக் கேட்டு கதை சொன்ன போது நான் எந்த அளவுக்கு அவசியம்? ஏன் நான் நடிக்க வேண்டும்? என்றேன். அவர் அதற்குச் சரியாகப் பதில் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது.
ஒவ்வொரு புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக் கொள்கிறேன். இந்தப் புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக் கொண்டேன். எது வேண்டும் எது தேவை என்பதில் அவர் தெளியாக இருந்தார். நல்ல திட்டமிடல் இருந்தது. இன்று டிஜிட்டல் வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மனோன் அப்படிப்பட்ட ரகமல்ல. அவரிடம் நல்ல திட்டமிடல் இருந்தது. தொழில் சிரத்தை உள்ளவர். முழுப்படத்தையும் திட்டமிட்டு எடுத்தார்.
இன்று தினசரிப் பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தால் 60 படங்களின் விளம்பரங்கள் வருகின்றன. எதைப் பார்ப்பது என்று மக்களுக்கே குழம்புகிறது. இருந்தாலும் இந்தப்படம் அதிலும் தனித்து தெரியும்படி வெற்றிபெற வேண்டும். சினிமாவுக்கு தயாரிப்பாளர் முக்கியம். தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படம் நூறு நாள் ஓட வேண்டும் என்பதை விட முதலில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று வாழ்த்தினார்.