தூய்மைப் பணிகளில் இறங்கிய ரோஜா எம்.எல்.ஏ

நகரி சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வரும் நடிகை ரோஜா, இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மேற்கொண்டிருக்கும் செயல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருப்பதோடு, பல்வேறு பாராட்டுக்களையும் அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. அவரது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடமாலை பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
இந்தச் சூழலில் அப்பகுதிகளில் நகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் துப்புரவு தொழிலாளர்கள் அப்பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அப்பகுதிகளில் தூய்மைப்பணி செய்ய தயக்கம் காட்டி இருக்கின்றனர். இதனையறிந்த ரோஜா எம்.எல்.ஏ தானே கிருமி நாசினி தெளிக்கும் பணியில் இறங்கினார். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளீல் வீடு வீடாகச் சென்று அவரே கிருமி நாசினி தெளிக்கத் தொடங்கினார். இதனைப் பார்த்த துப்பரவு தொழிலாளிகளும் துணிச்சலுடன் துப்புரவு பணியை தொடர்ந்தனர். நடிகையும் எம்.எல்.ஏவுமான ரோஜாவின் இச்செயலை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.