‘பாயும்புலி’ தயாரிப்பாளருக்கு மிரட்டல் : விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது போலீசில் புகார்!
விஷால் நடித்து வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள ‘பாயும் புலி’ செப்டம்பர் 4-ம் தேதி ரிலீசாகவுள்ளது. வேந்தர் மூவிஸ் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஆயத்தமாகி வருகிறது.
அதற்கு முன்பு ரஜினி நடித்த ‘லிங்கா’ பட நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என ‘பாயும் புலி’ படத்துக்கு எதிராக தியேட்டர்கள் உரிமையாளர்கள் இணைந்து லிங்கா விநியோகஸ்தர் சிங்காரவேலன் பணம் கேட்டு மிரட்டுவதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் கூறியிருப்பதாவது :
வேந்தர் மூவிஸ் தயாரித்து ‘பாயும் புலி’ படம் ரிலீசாக உள்ள நிலையில், ‘லிங்கா’ பட நஷ்டத்தை பெற்றுக் கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன் மேலும் தனக்கு பணம் தரவேண்டும் என மிரட்டி வருகிறார்.
ஏற்கனவே லிங்கா ப்டத்தை ரிலீஸ் செய்த வகையில் தனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன் மேலும் தொகை தனக்கு வர வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அதுவரை பாயும்புலி படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்றும் கூறி வருகிறார்.
எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்களை மிரட்டியும், பொதுமக்களுக்கு தவறான தகவல்களை அளித்து வரும் சிங்கார வேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவின் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தாணு, சிவா, ஆர். ராதாகிருஷ்ணன், கதிரேசன், பி.எல். தேனப்பன், வேந்தர் மூவிஸ் மதன், விஜயமுரளி, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உள்ளிட்டோர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அவர்களை சந்தித்து சிங்காரவேலன் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.