மஹத் உடன் ரொமான்ஸ் செய்ய ஓ.கே சொன்ன ஐஸ்வர்யா தத்தா!
‘பிக்பாஸ் தமிழ் சீசன் 2’வில் கலந்து கொண்டு பிரபலமானவர்களில் ஒருவர் நடிகர் மஹத்.
ஒரு சில படங்களில் சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்தவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய புகழைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பெரிய திரையில் பிசியாவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் மஹத் படங்களில் நடிக்கிறாரா? இல்லையா? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்பது சிலருடைய கேள்வியாக இருந்தது.
அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.
ஹாலிவுட் இயக்குனர் ராண்டி கென்ட்டிடம் துணை இயக்குனராக பணிபுரிந்த பிரபு ராம்.சி இயக்கும் ரோம்-காம் திரைப்படத்தில், மஹத் ராகவேந்திரா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் பிரபு ராம் கூறும்போது, “ரோம்-காம் படங்களின் தீவிரமான ரசிகன் நான். அது எந்த மொழி, எந்த நாட்டு படமாக இருந்தாலும் தவறாமல் பார்த்து விடுவேன். சேட்டிலைட் சேனலில் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்த காலம் முதல் எனக்கு ரொமாண்டிக் காமெடி படங்கள் இயக்கும் இயக்குனராக வேண்டும் என்பது ஆசை” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த திரைப்படம் வட சென்னை பையன் மற்றும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை சுற்றி நிகழும் கதை. அவர்கள் தங்கள் இயல்பு மற்றும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள். பக்கத்து வீட்டு பையன் போன்ற இயல்பான கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை நான் தேடிக் கொண்டிருந்தேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தபோது, மஹத்தின் இயல்பை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் இந்த கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் செய்வார் என்று உடனடியாக உணர்ந்தேன். அதேபோலவே ஐஸ்வர்யா தத்தா, அவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருப்பார் என்று நம்புகிறேன் என்றார்.
வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் தேர்வு முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த ரோம்-காம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.