‘பசங்க 2’ வருதுல்ல… : ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்
முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் ஒரு வாரத்துக்கு முன்பாகவே அவர்களின் ரசிகர்களுக்கு உற்சாகம் கரைபுரள ஆரம்பித்து விடும்.
படம் ரிலீசாகும் தியேட்டர்களில் பேனர்கள் வைப்பது, கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது, தெரு முழுக்க போஸ்டர்கள் ஒட்டுவது என்று கிளம்பிப் போய் விடுவார்கள்.
அந்த வகையில் நடிகர் சூர்யாவின் பசங்க 2 படத்துக்கும் அவரது ரசிகர்கள் பெரிய வரவேற்பைக் கொடுத்து மேற்கண்ட பணிகளை செய்ய திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட பணிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சூர்யா.
இதுகுறித்து அவர் ரசிகர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது :
அன்பு தம்பிகளுக்கு வணக்கம்,
சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்கள் மனித நேயப்பணி சிறக்க என் வாழ்த்துகள்.
அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ நான் என்றைக்கும் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரடியாகவே சொல்லியிருக்கிறேன். வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள பசங்க 2 திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலைகளைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்.
இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.