தள்ளிப்போகுது ரஜினி படம்? : தயாரிப்பாளர் ஆனார் ரஞ்சித்
‘கபாலி’ படம் சந்தித்த விமர்சனங்கள் கொஞ்சம் நஞ்சமில்லை. இருந்தாலும் அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் படம் குறித்து வந்த எல்லாவித விமர்சனக் கேள்விகளையும் துணிச்சலாக எதிர்கொண்டு தக்க பதிலடிகளை கொடுத்தார்.
”இது ரஜினி ரசிகர்களுக்கான படமில்லை” என்கிற விமர்சனங்களே அதிகம் வந்தது. அதையும் தாண்டி ”இப்படி ஒரு ரஜினியைத் தான் நாங்க திரையில பார்க்க ஆசைப்பட்டோம்” என்று ”மகிழ்ச்சி” தெரிவித்தவர்களும் அதிகம் தான்.
தன் ரசிகர்களுக்கு தன்னால் இனி எப்படிப்பட்ட படங்களை கொடுக்க முடியும் என்று ”கபாலி”யில் குறிப்பால் உணர்த்தியதால் தான் தனது அடுத்த படத்தை இயக்குகிற பொன்னான வாய்ப்பையும் இயக்குநர் ரஞ்சித்திடமே கொடுத்து விட்டார் ரஜினி.
மருமகன் தனுஷ் தயாரிப்பில் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கப் போகும் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்து சில மாதங்களான நிலையில் இப்போது அந்தப்படம் தள்ளிப்போகிறது என்கிற செய்தியும் கசிந்திருக்கிறது.
‘எந்திரன் 2’ படப்பிடிப்பை முடித்த கையோடு அமெரிக்காவுக்கு மீண்டும் ஹெல்த் செக்கப்புக்காக செல்கிறார் ரஜினி. அங்கு சில மாதங்கள் தங்கி ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் படப்பிடிப்பை படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைக்கச் சொல்லி விட்டாராம் ரஜினி.
இந்த இடைவெளியில் சும்மா இருந்தால் எப்படி என்று யோசித்த இயக்குநர் ரஞ்சித் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கி தனது உதவியாளர்களை இயக்குநர்களாக்கி அழகு பார்க்க ஆரம்பித்திருக்கிறார். முதலாவதாக தனது உதவியாளர் மாரி இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளார். கிருமி புகழ் கதிர் ஹீரோவாகவும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்திலும் இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
திட்டமிடல் எப்போதுமே வெற்றியைத் தான் கொடுக்கும்!