ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாமல் தூத்துக்குடி சென்று ஆறுதல் சொன்ன விஜய்! #VijayAtThoothukudi
மக்களைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்தனர். பலர் தூத்துக்குடிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
நானும் ஆறுதல் சொல்லப் போகிறேன் என்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஏதோ தன்னுடைய புதுப்பட ரிலீசின் புரமோஷனுக்கு போவது போல கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் ஆராவாரமாக சென்று விட்டு வந்தார். அதோடு போராடிய மக்களை சமூக விரோதிகள் என்று அவர் குற்றம் சாட்டியது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும், பொதுவெளியில் கடும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் உண்டாக்கியது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நடிகர் விஜய் முன்னறிவுப்பு எதுவும் செய்யாமலேயே தூத்துக்குடிக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றவர் தூத்துக்குடியில் ஸ்லோனின் ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கியிருக்கிறார்.
விஜய்யின் வருகை குறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்லோனின் அம்மா தெரிவித்த போது “மகளை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டு வெளியே உட்கார்ந்திருந்தோம். அந்த நேரத்தில் இரண்டு பைக் வந்தது. யாரென்று தெரியவில்லையே என பார்த்தோம். உடனே கையெடுத்து கும்பிட்டபடி விஜய் வீட்டுக்குள் வந்தார். எங்களுடன் அமர்ந்து எங்களுடைய அனுதாபத்திலும், சோகத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்.
‘நேரம் பிந்தி வந்தேம்மா’ அதற்காக தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் என்றார். மேலும் இரவு நேரத்தில் வந்ததற்காக எங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். புகைப்படம் கூட எடுக்க வேண்டாம் என்று மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். எங்கள் வேதனையில் மகனைப் போல பங்கெடுத்துக் கொண்டார்” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ள விஜய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பகலில் சென்றால் ரசிகர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதாலேயே எந்தவித பந்தாவும், பில்டப்பும் இல்லாமல் நள்ளிரவில் ஆறுதல் கூறிவிட்டு வந்திருக்கிற விஜய்யின் மனித நேயத்தை சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.