‘கொல்லங்குடி கருப்பாயி’யை தேடிப்பிடித்து நிதியுதவி! : பலே… விஷால் பலே…

பாண்டவர் அணி வசம் நடிகர் சங்கம் வந்த பிறகு புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கின்றன. ஒருபக்கம் தேர்தலில் போட்டியிட்ட போது நடிகர் சங்க கட்டிடம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வேலைகளில் பிஸியாக இருந்தாலும், தங்கள் நடிப்புப் பணிகளுக்கிடையே நலிந்த கலைஞர்களை இனம் கண்டு அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் தார்மீக ரீதியான உதவிகளை செய்யவும் தவறுவதில்லை.
அப்படித்தான் பிரபல நாட்டுப்புறப்பாடகி கொல்லங்குடி கருப்பாயியை தேடிக்கண்டுபிடித்து நலிந்த நிலையில் இருக்கும் அவருக்கு உதவி செய்திருக்கிறார் நடிகர் விஷால்.
மதுரை-தொண்டி சாலை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி. இவரை 1985-ல் இயக்குநர் பாண்டியராஜன் ‘ஆண் பாவம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் இளையராஜாவின் இசையில் இவர் பாடிய பாடல் புகழ்பெற்றது. 1993-ல் இவரது கலைச்சேவையை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கலைமாமணி விருது பெற்றவர்,
சினிமா மூலம் நாட்டுப்புறப் பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் பரவச்செய்த நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயிக்கு வயது 80 ஆகி விட்டது. அரசு வழங்கும் நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500-ல் வாழ்க்கை நடத்தி வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறேன் என்றும் மருத்துவச் செலவுக்கும், நல்லது கெட்டதுக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன், சுமார் 10 சினிமா படங்களில் நடித்தும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட சேர்க்காமல் கைவிடப்பட்டேன் என்றும் சமீபத்தில் `தி இந்து’ நாளிதழில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை படித்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் புரட்சி தளபதி விஷால் அவர்கள் உடனே சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி உள்ள நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி அம்மா அவர்களுக்கு உதவி தொகை வழங்கியிருக்கிறார். அதோடு ஒரு வாரத்திற்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு தென்னித்திய நடிகர் சங்கத்திலும் ஆணையிட்டார்.