சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது! : விஷாலுக்கு எதிராக ராதிகா ஆவேசம்
நடிகர் சங்க கட்டிடம் வளர நிதியைசேர்க்கிறாரோ இல்லையோ? அடுத்தடுத்த பிரச்சனைகளை சேர்ப்பதில் மும்முரமாகியிருக்கிறது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி.
காவேரி விவகாரத்தில் ஒட்டுமொத்த கன்னட நடிகர், நடிகைகளும் அங்குள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தெருவில் இறங்கி போராடுகிறார்கள்.
ஆனால் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமோ காவேரி விவகாரத்தில் எந்த ரியாக்ஷனும் காட்டப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள். அவர்களின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தை கூட்டிய சங்கச் செயலாளர் விஷால்
நடிகரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான சரத்குமார், செயலாளர் ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், அவர்கள் மீது நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்கிறது விஷால் தரப்பு.
இந்தத் தகவல்கள் ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்ததும் ஆவேசமாகி விட்டார் நடிகை ராதிகா சரத்குமார்.
“ நடிகர் சங்கத்தில் சூனியக்கார வேட்டை தொடங்கி விட்டது. 100 கோடி ஊழல் என்றார்கள். தற்போது வேறு தொகை சொல்கிறார்கள். எந்த விளக்கமும் கேட்கப்படமால், உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்கள். இது முதிர்ச்சியில்லாத சிந்தனையாக தெரிகிறது.
இதற்கு என்னதான் முடிவு?.. எந்த ஆதரமும் இல்லாமல் புகார் கூறுகிறீர்கள். உங்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை அழிக்க வேண்டும். இன்னும் நீங்கள் வளர வேண்டும். உங்களுக்குள் ஏராளமான வெறுப்பு சிந்தனை உள்ளது” என்று காட்டமாக கூறியுள்ளார்.
மேலும், இப்படியெல்லாம் கேள்விகள் கேட்டதற்காக என்னையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள்…” என்று விஷாலை நக்கலடித்திருக்க்றார் ராதிகா.
அதோடு நடிகர் சங்கம் தொடர்பான தனது அத்தனை கருத்துகளையும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரின் பார்வைக்கும் அனுப்பியிருக்கிறார் ராதிகா.
புகைச்சல் அவ்ளோ சீக்கிரம் அடங்காது போலிருக்கே..?