போண்டாவை வடையாக மாற்றியது தான் விஷால் செய்த மாற்றம்- சிம்புவின் இயக்குநர் அதிரடி
படங்களுக்கான பட்ஜெட் என்பது இப்போது பாக்கெட் சைஸில் சுருங்கிவிட்டது. தரமான கேமாராவும் தொழில்நுட்ப அறிவும் இருந்தால் இருபது லட்ச ரூபாயில் கூட ஒரு படத்தை எடுத்துவிட முடியும். ஆர்ட்டிஸ்ட் இல்லாத படங்களை யாரும் வாங்குவதற்கு தயார் இல்லை என்பதாலே பலரும் ஆர்ட்டிஸ்டை நம்பி ஓடுகிறார்கள். மற்றபடி தரமான படங்களுக்கும் ஆர்ட்டிஸ்ட்களும் சம்பந்தமில்லை எனலாம்.
சிம்பு நடிப்பில் உருவாகி வந்த கெட்டவன் உருவாகி பின் உருமாறி நின்று போனது பற்றி அறிந்த செய்தி. அந்தப்படத்தின் இயக்குநர் கன்டி வெகுநாட்களுக்குப் பிறகு டே நைட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். வெறும் பத்துலட்ச ரூபாயில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் கன்டி கண்டமேனிக்குப் பேசித்தள்ளினார். “இந்தப்படம் மிக வித்தியாசமான திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்றவர் போகிறபோக்கில் விஷாலையும் ஒரு தாக்கு தாக்கினார். முன்பு தயாரிப்பாளர் சங்கத்தில் போண்டா கொடுப்பார்கள். இப்போது வடை கொடுக்கிறார்கள். கேட்டால் விஷால் வந்ததால் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்” என்று அதிரடித்தார்