‘AGP’ பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகை லட்சுமி மேனன் இதுவரை ஒரு வணிகரீதியிலான கதாநாயகியாகப் படங்களில் வலம் வந்தவர். இப்போது புதிய பாத்திரங்களில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். வித்தியாசமான சவாலான இதுவரை ஏற்றிராத ,யாரும் கற்பனை செய்ய முடியாத மாதிரியான கதாபாத்திரங்களுடன் கதை சொல்பவர்களுக்கு முன்னுரிமை தருகிறார் .அவ்வகையில் கதையும் பாத்திரமும் கவர்ந்து நடிக்கும் தமிழ்ப்படம்தான் ‘ஏஜிபி’.
இதில் ஸ்கீசஃப்ரீனியா (Schizophrenia) என்கிற மனச்சிக்கல் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.அது என்ன ஸ்கிசஃப்ரீனியா ?
கற்பனை உலகையும் மெய்யான உலகையும் ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதலும், பெரும்பாலும் விசித்திரமான, எதிர்பாராத முறைகளில் நடந்துகொள்ளுதலும் ஆகிய கடுமையான மனநோய் வகை இது.எண்ணம், உணர்வு, செயல் ஆகியவை ஒன்றோடொன்று முரண்படுதலும் மாயத் தோற்றங்களுக்கு ஆட்படுதலுமான மனக் கோளாறு இது.
இதன்படி ஒரு பாத்திரம் நடந்ததை நடக்காததாகச் சொல்லும். நடக்காததை நடந்ததாகச் சொல்லும். கண்முன் இருப்பவர்களை இல்லாதவர்கள் போலவும் இல்லாதவர்களை இருப்பவர்கள் போலவும் பாவனை செய்து கொள்ளும். இது ஒரு கொடுமையான மனக்கோளாறாகும். இப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தில் லட்சுமி மேனன் நடிக்கிறார்.