விநோதய சித்தம்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

சிறுபொறியே பெரு வெளிச்சம் என்ற வார்த்தைக்கேற்ப சிறிய படைப்பாக தோற்றம் தந்து பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் படைப்பு விநோதய சித்தம் திரைப்படம்

தன்னால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பில் நேரத்தை தவமென கடைப்பிடித்து வாழும் தம்பி ராமையாவிற்கு ஒரு விபத்து மூலமாக ஓர் மரண தரிசனம் கிடைக்கிறது..யெஸ் மரணம் என்பதே தரிசனம் தான் என்பதை படம் முடிவில் உணர்த்தி விடுகிறது.

நம் வாழ்வில் அடுத்த நொடி என்னவென்பதையே தீர்மானிக்க முடியாத நபர்கள் நாம். நாமாடும் ஆட்டமும் ஆணவமும் எதற்காக? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி…இந்த உலகில் நாம் ஒரு துரும்பு கூட அல்ல என்ற தத்துவத்தை தலையில் தட்டி புரிய வைக்கிறது படம்.

கதையின் நாயகனாக தம்பி ராமையா. இந்த வருட சிறந்த நடிகருக்கான விருதை நிச்சயமாக அவருக்கென ஒதுக்கி வைக்கலாம். கணநேரமும் அவரை விடாமல் பின் தொடரும் கேரக்டர் சமுத்திரக்கனிக்கு. அவரே இயக்குநர் என்பதால் அந்தக் கேரக்டரின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். முடிவில் நம் மனம் நிறையச் செய்கிறது அக்கேரக்டர். மேலும் படத்தில் வரும் உப கேரக்டர்கள் அனைவருமே அசத்தி இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும் இசையும் இந்தக் கதைக்கு அதிகம் மெனக்கட வேண்டும். அதை உணர்ந்து ஒளிப்பதிவாளர் ஏகாம்பரமும், இசை அமைப்பாளர் சத்யாவும் கடும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

வசனங்கள் ஒவ்வொன்றிலும் வழக்கம் போல் தனித்து தெரிகிறார் சமுத்திரக்கனி. ஒரு பாடம் போன்ற படமென்றாலும் ஒரு நல்ல திரைக்கதையோடு இதை அணுகி இருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. நிச்சயமாக இந்தப்படம் நம் தமிழ்சினிமாவின் மடியில் விழுந்த கனி

4/5