தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன் : அசர வைத்த அல்லு அர்ஜூன்!

மொழிகளைக் கடந்தது திரையுலகம் என்பார்கள். அது இன்றும் நிரூபணமானது. பெரும்பாலான தெலுங்கு ஹீரோக்கள் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்றாலும் அவர்களுடைய திரையுலக வாழ்க்கை ஆந்திராவில் தான் காலூன்றி நின்றது.
அதில் குறிப்பிடத்தக்க ஹீரோ அல்லு அர்ஜூன்.
என்னதான் ஆந்திராவில் நான் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் பிறந்து வளர்ந்த மண்ணில் ஜெயிக்க வேண்டுமென்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. அது 10 வருடங்களுக்குப் பிறகு இன்று எனக்கு நிறைவேறியிருக்கிறது என்றார் அல்லு அர்ஜூன்.
ஆமாம் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்க ஸ்டூடியோ க்ரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் லிங்குசாமி.
படத்தின் அறிமுக விழா இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இன்னொரு விசேஷமான அம்சம் படத்தை தயாரிக்கும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்கும் இது 10 வது வருடமாம். 10 வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பு தான் இந்தப்படம் என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது அவர்களில் சிலர் என்னிடம் ” நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்திருக்கு மிகப்பெரிய ரசிகர்கள்” என்றனர். அவருக்கு தமிழிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து நான் தமிழில் இயக்கும் நேரடி தமிழ் படம் இருக்கும். நான் சண்டகோழி திரைப்படத்தை முடித்த பின்னர் இப்படத்தை துவங்கவுள்ளேன் என்றார் இயக்குநர் லிங்குசாமி.
அடுத்த பேச வந்த நாயகன் அல்லு அர்ஜூன் தப்பு தப்பாக பேசினாலும் தமிழிலேயே பேச வேண்டும் என்கிற முடிவோடு வந்திருக்கிறேன் என்றவாறே தமிழில் பேச ஆரம்பித்தார்…
நான் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான். 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான். நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை. அதற்க்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ்ப்படம் நடிக்க வேண்டும் என்பது தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன். அதற்கான ஒரு நல்ல படமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது என்றார் அல்லு அர்ஜுன்.
படத்தின் நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் தவிர இன்னும் டைட்டில் உள்ளிட்ட பல விஷயங்கள் முடிவாகவில்லை. அந்த வேலைகள் அடுத்தடுத்து தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.