8 தோட்டாக்கள் – விமர்சனம்

RATING 3/5

ரு துப்பாக்கியில் இருக்கும் எட்டு தோட்டாக்கள் அடுத்தடுத்து எட்டு இடங்களில் வெடிப்பதால் வருகிற பிரச்சனைகளும் அதை எப்படி துப்பாக்கிக்கு சொந்தக்காரரான போலீஸ் ஹீரோ சமாளித்து மீள்கிறார் என்பதே இந்த ‘8 தோட்டாக்கள்.’

செய்யாத கொலைக்காக சிறு வயதிலேயே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் ஹீரோ வெற்றி. அங்கு ஒரு கான்ஸ்டபிள் உதவியுடன் படித்து இன்ஸ்பெக்டர் வேலைக்கு சேர்கிறார்.

எந்த வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியே உருவாக காட்சியளிக்கும் அவரிடம் வேலை வாங்க வேண்டுமென்பதற்காக துப்பாக்கி ஒன்றை கையில் கொடுத்து பிரபல ரெளடி ஒருவனை பின் தொடர அனுப்புகிறார் உயர் அதிகாரி மைம் கோபி.

ஆனால் செல்கிற வழியில் வைத்திருந்த துப்பாக்கி ஹீரோவிடமிருந்து பிக் பாக்கெட் அடிக்கப்படுகிறது.

இதனால் டென்ஷனாகும் உயர் அதிகாரியான மைம் கோபி ”உனக்கு ஒரே ஒரு நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் துப்பாக்கியை கண்டுபிடித்துக் கொடுத்து விட்டு உன் வேலையை தக்க வைத்துக் கொள்” என்று எச்சரிக்கிறார்.

காணாமல் போன துப்பாக்கியோ பல கைகள் மாறி இறுதியில் ஒரு முதியவர் கையில் கிடைக்கிறது. அவரோ அதை வைத்து அடுத்தடுத்து எட்டு கொலைகளைச் செய்ய. எல்லாம் ஹீரோ வெற்றியின் பாவக்கணக்கில் சேர்கிறது.

அந்த முதிய கொலைகாரன் யார்? எதற்காக எட்டு கொலைகளைச் செய்கிறான்? அந்த இக்கட்டான எட்டு நிலைகளை ஹீரோ எப்படி கடந்து வந்தார்? என்பதே கிளைமாக்ஸ்.

‘துருவங்கள் 16’ பட பாணியில் ஒரு க்ரைம் த்ரில்லர். கிட்டத்தட்ட அந்தப் படத்தின் இயக்குநர் வயதையொட்டியவர் தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் என்றாலும் இவர் மிஸ்கினின் உதவியாளர் என்பது கூடுதல் தகுதி.

போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கும் பெரியவர் ஒருவரை உயர் அதிகாரியான மைம்கோபி மிரட்டி, அடித்து அவர் வாழ்வாதாரமாய் இருந்த டைப்பிங் மிஷினையும் போட்டு உடைத்து விட்டு வந்தால் இவரோ அதே பெரியவருக்கு புதிதாக மிஷின் ஒன்றை வாங்கிக் கொடுத்து நமக்கேன் வம்பு என்கிற ரகம் ஹீரோ வெற்றி. காவல் துறையில் இப்படியும் ஒரு போலீஸ் அதிகாரி இருப்பாரா? என்று படம் பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஆள் பார்க்க அமைதியாக இருந்தாலும் காக்கி உடுப்பில் கனகச்சிதம். எந்த பில்டப்பும் இல்லாமல் சிம்பிளான அவருடைய எண்ட்ரியே செம கியூட். டிவி சேனல் நிருபராக வரும் நாயகி அபர்ணா பாலமுரளி தமிழுக்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற ஒரு அறிமுகம். ஆரம்பத்தில் ஹீரோ வெற்றியுடன் நெருங்கும் போது நீங்க மட்டும் எப்படி போலீஸ்காரங்கள்ல நல்லவரா இருக்கீங்க? என்று கேட்கிறவர், பின்னர் ஒரு காட்சியில் தன் வேலையைக் காப்பாற்றிக் கொள்ள அவரையே பயன்படுத்திக் கொள்வதுமாக நடிப்பில் வித்தியாசம் காட்டி கவர்ந்திருக்கிறார்.

படத்தின் ஒட்டுமொத்த கனத்தையும் தூக்கி சுமப்பது எம்.எஸ்.பாஸ்கரின் அந்த முதியவர் கேரக்டர் தான். பென்ஷனுக்காக நடையாய் நடப்பதும், வயதாகி விட்டதால் பெற்ற பிள்ளைகள், மருமகள் எல்லோரும் அவரை நடத்துகிற விதமும் எல்லாவற்றையும் அவர் விவரிக்கிற போது படம் பார்க்கிற ரசிகர்களின் மனதை கண்ணீரால் கசிந்துருகச் செய்கிறது. அவருடைய சினிமா கேரியரில் ஆகச் சிறந்த படம் இதுதான் என்று போகிற இடங்களில் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்.

குறிப்பாக இவரால் எந்தப் பிரயோசனமும் இல்லை என்று தெரிந்ததும் மருமகள் வார்த்தைகளால் கொல்லுவதும், அதே மாமனார் தனது பென்ஷன் பணத்தை கொண்டு வந்து கொடுக்கிற போது ‘அப்பா’ என்று சொல்லி குணம் மாறுவதும் நிதர்சனம். விசாரணை அதிகாரியாக வரும் நாசர், இன்னொரு போலீஸ் அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் டி.சிவா இருவரின் மிடுக்கான நடிப்பும் கூடுதல் பலம்.

கே. தினேஷ் பாபுவின் ஒளிப்பதிவும், கே.எஸ் சுந்தர மூர்த்தியின் பின்னணி இசையும் கதையோடு பிண்ணிப் பிணைந்து ரசிக்க வைக்கிறது. மெதுவாக நகரும் சில இடங்களில் கத்தரி போட்டிருந்திருக்கலாம் எடிட்டர் நாகூரான்.

தமிழில் அதிகம் பார்த்திராத புதிய கோணத்தில் கதையெழுதி திரைக்கதை, வசனம் என மற்ற இரண்டு முக்கியமான விஷயங்களிலும் அதிக கவனத்தோடும், சிரத்தையோடும் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கணேஷ்.

அதே சமயம் ஆரம்பத்திலிருந்து மெதுவாகவே நகரும் காட்சிகள் அப்படியே மிஸ்கின் படங்களை ஞாபகப்படுத்துகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும் அந்த நீண்ட வசனக் காட்சியில் ரொம்பவே அழுப்பு. அதில் யோசிக்காமல் கத்தரியை லைட்டாக வெட்ட விட்டிருந்தால் படம் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கும்.

இது போன்ற புதிய முயற்சிகள் தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு போகக் கூடிய ஒன்று. அந்த வகையில் இந்த 8 தோட்டாக்கள் படமும்  வரவேற்று பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று.

8 தோட்டாக்கள் – குறி தப்பாத வெற்றி!

8 Thottakkal8 Thottakkal Movie Review8 Thottakkal ReviewAparna BalamuraliM.S.BhaskarMime Gopi Sri GaneshMovie ReviewNassarReviewSundaramurthy K SVetri
Comments (0)
Add Comment