RATING : 3.5/5
காதலும் சரி, ஆக்ஷனும் சரி கெளதம் மேனனுக்கு கை வந்த கலை. அந்த இரண்டையும் ஒரே படத்தில் கலந்து கட்டி பார்த்த அனுபவம் தான் இந்த ‘அச்சம் என்பது மடமையடா’.
எம்.பி.ஏ படிப்பை முடித்த கையோடு ஒரு ரோட் ட்ரீப் போக ஆசைப்படுகிறார் சிம்பு. அவரோடு அவர் வீட்டில் தங்கையின் தோழியாக வந்து தங்குகிற நாயகி மஞ்சிமா மோகனும் கெளம்புகிறார். போகிற போக்கிலேயே நெருங்கிப் பழகும் இருவருக்குமே லவ்.
லவ் ஜோடி கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு மகாராஷ்டிராவுக்கு வண்டியை கிளப்பிக் கொண்டு ஹைவேஸில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு லாரி விபத்து ஏற்படுகிறது.
அடுத்தடுத்த காட்சிகளில் நடந்தது விபத்தல்ல, மஞ்சுமாவைக் கொலை செய்யும் முயற்சி என்று தெரிய வர அதிர்ச்சியடைகிறார் சிம்பு.
அதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடித்து தண்டிக்க அச்சம் துறந்து நெஞ்சம் நிமிர்த்துவது தான் கிளைமாக்ஸ்.
மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு திரையில் சிம்பு. சில காட்சிகளில் குண்டாகவும், சில காட்சிகளில் ஒல்லியாகவும் தெரிகிறார். அதே சமயம் அவரது நடிப்பில் தெரிகிற முதிர்ச்சியும், நடனம், ஆக்ஷன் காட்சிகளில் தெரிகிற இயல்பும் பக்கா மாஸ்.
எதற்காக காதலியின் குடும்பத்தையும் தன்னையும் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது தெரியாமலேயே குழம்புவதும், இனி இங்கே இருக்கக் கூடாது என்று வண்டியில் கிளம்பி திடீரென்று நிறுத்தி திருப்பி அடிக்கணும் என்று நெஞ்சம் நிமிர்த்தி வண்டியை திருப்பிக் கொண்டு கிளம்புவதும் விசில் சத்தங்களை அள்ளும் செம மாஸ் சீன்கள்.
நாயகியாக வரும் மஞ்சுமா மோகன். கொஞ்சம் பூசினாற்போல இருக்கிறார். அழுகிறார், சிரிக்கிறார், தலைமுடியை கோதி விடுகிறார். அவ்வளவு ஏன் சிம்பு நடிப்பதையே ஆச்சரியமாகப் பார்க்கிறார்.
எந்த போலீசை உதவிக்குக் கூப்பிட்டாலும் தானே வந்து வில்லத்தனம் செய்யும் பாபா சேகல் மிரட்டலான வில்லன். டான்ஸர் சதீஷ் வருகிற சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
ரோட் ட்ரீப் கதை என்பதால் சென்னை, கன்னியாகுமரி, மகாராஷ்ட்ரா என பல இடங்களின் அழகை ஒளிப்பதிவில் அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது டான் மெக்கார்தர், தேனி இருவரின் ஒளிப்பதிவு!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தள்ளிப்போகாதே… ராசாளி… என படத்தில் இடம்பெற்றுள்ள அத்தனை பாடல்களும் மனசை லேசாக்குகிற மெலோடி ரகங்கள்!
”லைஃப்ல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமாங்கிறது தான் கேள்வி” மாதிரியான நச் வசனங்களை ஆங்காங்கே அள்ளிப்போட்டு கைதட்டல்களை அள்ளுகிறார் கெளதம்.
படத்தில் கிளைமாக்ஸ் நெருங்கும் வரை சிம்புவின் பெயரை சொல்லாமலேயே காட்சிகளை நகர்த்தியிருப்பது டைரக்டர் ‘டச்’சின் புத்திசாலித்தனம்.
கெளதம்மேனன் படங்களில் காதல் என்றாலே ஒரு லைவ்லினெஸ் இருக்கும். இதில் அது மிச்சம் இல்லாமல் முதல்பாதியில் எக்ஸ்போஸ் ஆகியிருக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா” எபெக்ட்ஸ் சில ரொமான்ஸ் காட்சிகளில் வெளிப்பட்டாலும் அதுவும் ரசிக்க வைக்கிற அழகு தான்.
போகிற போக்கில் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக்கொண்டு செல்வதும், ட்ரைவிங் தெரியா விட்டாலும் கார்களை அசால்ட்டாக ஓட்டிச் செல்வதும், கண்ணில்படுகிற வில்லன் கோஷ்டியினரை பொட் பொட்டென்று சுட்டுப்போடுவதுமான ஒரு சில இடங்களில் தானாக தென்படுகிற சில லாஜிக் மீறல்களைத் தவிர வேறு எந்த குறைகளையும் படத்தில் காண முடியவில்லை.
முதல் பாதியில் லவ் லவ் என்று நகரும் காட்சிகள் இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் த்ரில்லராக டேக் ஆப் ஆவது செம விறுவிறு… அந்த வகையில் முதல் பாதி முழுக்க செம லவ், இரண்டாம் பாதி முழுக்க பக்கா ஆக்ஷன் என தனக்கே உரித்தான ஹை கிளாஸ் மேக்கிங்கில் ரசிகர்களை இருக்கையோடு கட்டிப்போடுகிறார் டைரக்டர் கெளதம் மேனன்.
அச்சம் என்பது மடமையடா – லவ் – ஆக்ஷன் மேஜிக்!