RATING : 3.3/5
”எல்லா பெற்றோர்களும் தங்களது கனவை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள்” என்கிற குற்றச்சாட்டு இந்த சமூகத்தில் பரவலாக இருந்து வருகிறது.
அந்த கருத்துக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வந்திருக்கும் படம் தான் இந்த ”அம்மா கணக்கு.”
கணவரை இழந்த சேரிப்பெண்ணான அமலாபால் தன் ஒரே மகளை நன்றாக படிக்க வைத்து வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து விட வேண்டுமென்பது ஆசை.
இதனால் அளவுக்கு மீறிய பாசத்தோடு வளரும் சிறுமி யுவஸ்ரீ படிப்பில் ஆர்வம் காட்டாமல் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறாள்.
தன் மகளை கலெக்டராக்கி பார்க்க வேண்டும் என்கிற கனவில் அமலாபால் இருக்க, ஒரு டாக்டரோட பொண்ணு டாக்டர் ஆகிற மாதிரி, இன்சினியரோட பொண்ணு இன்சினியர் ஆகிற மாதிரி வேலைக்காரி, நானும் வேலைக்காரியாத்தான் ஆவேன் என்கிறார் சிறுமி யுவஸ்ரீ.
அவள் சொல்வதைக் கேட்டு மனசு உடைந்து போகும் அமலாபால் அவள் மனதில் இருக்கும் அந்த எண்ணத்தை மாற்றி அவளை எப்படி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறாள்? என்பதே கிளைமாக்ஸ்.
படத்தில் ஹீரோ என்று யாருமில்லை. அந்தக் குறையை தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் நிறைவாக்கியிருக்கிறார் .கதையின் நாயகியாக வரும் அமலாபால்.
சேரிப்பெண் என்பதற்கான மேக்கப், உடைகள் எல்லாற்றிலும் கச்சிதமாக பொருந்திப் போகிற அமலாபாலின் நடிப்பில் சின்னச் சின்ன அசைவுகளும் அப்ளாஸ் வாங்குகின்றன. அதிலும் கூவத்தில் இறங்கி துணிகளை துவைக்கிற காட்சியெல்லாம் ஆச்சரியம்.
விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் மகளை எப்படியாவது கலெக்டராக்கிப் பார்த்து விட வேண்டும் என்கிற கனவுக்கு அமலாபால் படும்பாடும், பெற்ற மகளே அவரை பார்க்கும் சந்தேகப் பார்வையும், பின் அம்மாவின் நிஜமான உழைப்பைப் பார்த்து கண்ணீர் விடுவதும் நெகிழ வைக்கும் காட்சிகள்.
பெற்ற பெண் பிள்ளைகள் அம்மாக்காளை புரிந்து கொள்ளாமல் போவதும், பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அதை எடுத்துச் சொல்வதும் மாதிரியான காட்சிகள் இந்தக் கால பெண்களுக்கு ஒரு பாடம்!
அமலாபாலின் மகளாக வரும் சிறுமி யுவஸ்ரீக்கு இதுதான் முதல் படமாம். ஆனால் எந்த காட்சியிலும் முதல் படம் என்பதே தெரியாத வண்ணம் முதிர்ச்சியான நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தளவுக்கு அமலாபால் – யுவஸ்ரீ இருவருக்குமான அம்மா – மகள் பாத்திரப் பொருத்தம் கன கச்சிதம்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வரும் சமுத்திரக்கனி நடை, உடை, நடிப்பு எல்லாமே சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. ஆனால் தேர்வு நேரம் முடிந்து எழுதுபவர்களிடம் வம்படியாக பேப்பர்களை வாங்கிக் கொண்டு செல்வதெல்லாம் யதார்த்தத்தை மீறியது. குறைந்த காட்சிகளே வந்தாலும் மனதை விட்டகழாத காட்சிகளில் வந்து போகிறார் மாஜி நடிகை ரேவதி.
”ஏழைகளுக்கு கனவு காண உரிமை இல்லை” என்று மகள் சொல்வதும், ”கனவு காண்பது மட்டும் தான் ஏழைகளுக்கு ஒரே ஆயுதம்” என்று அம்மா பதிலுக்கு பேசுவதும் வசனத்தின் கூர்மை.
ரேவதி வீடு, பள்ளிக்கூடக் காட்சிகள் அமலாபாலின் வீடு, அதைச்சுற்றியுள்ள மனிதர்கள் என எந்தக் காட்சியும் செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருப்பதே படத்தை ரசிக்க வைக்கிறது.
கேவ்மிக் யு ஓளிப்பதிவில் சேரிப்பகுதியின் இரவுக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. இசைஞானியின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு பக்க பலம்.
முதல் பாதியில் இருக்கிற ஆமை வேகம் இடைவேளைக்குப் பிறகு முயல் வேகமெடுக்கிறது.
இது போன்ற படங்களுக்கு கதை தான் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்துக்கு எந்த பங்கமும் இல்லாமல் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடந்து போகிற உணர்வுப் பூர்வமான சம்பவத்தை கதையாக்கி அதை ஞாபகப்படுத்தி பார்க்கக் கூடிய வகையில் யதார்த்தமான படமாக இயக்கித் தந்திருக்கிறார் பெண் இயக்குநர் அஸ்வினி ஐய்யர் திவாரி.
காசு சம்பாதிக்கணும் என்பதைத் தாண்டி ஒரு நல்ல கருத்தை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற நல்ல நோக்கத்துக்காக இந்தப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் தனுஷை மனம் திறந்து பாராட்டியே ஆக வேண்டும்.
அம்மா – மகள் மட்டுமல்ல அவர்கள் சார்ந்த ஒட்டுமொத்த குடும்பமும் குடும்பம் குடும்பமாக சென்று பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் இந்த ‘அம்மா கணக்கு.’
அம்மா கணக்கு – ஆல் கிளாஸ் அம்மாக்களுக்கும் பிடிக்கும்!