பிகில்- விமர்சனம்

ஆவி பறக்குற இட்லி எப்படி திகட்டாதோ அப்படி தான் அட்லீ எடுக்குற படங்களும் திகட்டாதுன்னு ஒரு டாக் உண்டு. குறிப்பாக விஜய்யோடு அட்லீ சேர்ந்தால் கமர்சியல் சூடு அதிகமாக இருக்கும். யார் கண் பட்டதோ பிகில் அந்த ரூட்டில் அமையாமல் சறுக்கி விட்டது.

பல ஆண்டு கால தமிழ்சினிமாவில் ஊறப்போட்ட கதைதான் பிகில் படத்தின் கதை. லோக்கல் அரசியல் வாதிகளை கூட அசால்டாக மடக்கும் மைக்கேல் விஜய்க்கு கதிர் தலைமையிலான வுமன் புட்பால் டீம் கப் அடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசைக்குப் பின்னால் தன் தந்தை ராயப்பன் விஜய்யின் கனவு இருக்கிறது. தந்தை கனவை மகன் வுமன்ஸை வைத்து எப்படி நிறைவேற்றினார் என்பது தான் பிகில் படத்தின் அவுட் லைன்

வழக்கம் போல ஷார்ப்பான விஜய். நடனம் நகைச்சுவை ஆக்‌ஷன் என கலகலப்பு ஊட்டுகிறார். ராயப்பன் கேரக்டரை முழுமையாக அவரால் தூக்கிச் சுமக்க முடியாவிட்டாலும் ஓரளவு சமாளித்து இருக்கிறார். மிக முக்கியமாக இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் பெண்களை மோட்டிவேட் செய்யும் காட்சிகளில் நம்ம வீட்டுப் பிள்ளையாக உருக வைக்கிறார். நயன்தாரா போலவே இந்தப்படத்தில் இவர்கள் எதற்கு என்று கேட்பதற்கு நிறையபேர் இருக்கிறார்கள். விவேக், ஆனந்த்ராஜ், அந்த லிஸ்டில் முக்கியமானவர்கள். யோகிபாபு ஒருசில இடங்களில் மட்டும் கிச்சுகிச்சு மூட்டுகிறார். கதாபாத்திரங்களின் வார்ப்பு இந்தப்படத்தில் அட்லீக்கு ஏனோ கை வரவில்லை. படத்தின் பெரிய ஆறுதல் ஒளிப்பதிவும் ஆக்‌ஷன் சீக்வென்ஸும். அடுத்து பின்பாதி படமும்.

முன்பாதி முழுதும் வெறும் விஜயிசமும் ஒப்பேற்றலும் தான். சிங்கப்பெண்ணே பாடலும் அதை படமாக்கிய விதமும் அட்டகாசம்.

இடைவேளை வரையில் திரையெங்கும் விஜய் விஜய் விஜய். நம்ம மனசு எங்கே கதை கதை கதை என்று கேட்டே டயர்டாகி விடுகிறது. பின்பாதியில் நம் டயர்டு போய் ஒரு உற்சாகம் வந்தாலும் முன்னாடி வாங்கிய அடியை மறக்க முடியவில்லை. அதனால் முன்பாதியை பொறுத்துக்கொண்டால் பின்பாதியில் ஆறுதல் அளிப்பார் பிகில்

Actor VijayActress NayantharaBigilbigil movie reviewDirector Atlee
Comments (0)
Add Comment