Rating : 2.3/5
சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் ரயிலில் தனது நண்பன் ஆதவனை வழியனுப்ப வருகிறார் ஹீரோ மிதுன். வந்த இடத்தில் நாயகி மிருதுளாவை கண்டதும் காதலில் விழுகிறார். அந்தக் காதலை உறுதிப்படுத்த அவரும் ஓடும் ரயிலில் ஏறுகிறார். நாகர் கோவிலை அடைவடைதற்குள் இருவருக்கும் காதல் வர இந்த விஷயம் எப்படியோ மிருதுளாவின் அண்ணனுக்கு தெரிய வருகிறது.
விடுவாரா அண்ணன்?
மிதுனை துவைத்து எடுக்க தனது அடியாட்களோடு வெறி கொண்டு ரயில்வே ஸ்டேஷன் வருகிறார். அதன்பிறகு மிதுன் யார் என்கிற விபரம் தெரியவும் குத்து, வெட்டு, ரத்தம் என எந்த வன்முறையும் இல்லாமல் சுபமாக முடிகிறது படம்.
சுமார் 12 மணி நேரம் ஓடும் ரயிலில் என்னென்ன சுவாரஷ்யங்களை வைக்க முடியுமோ அவை அத்தனையையும் வழி நெடுக பந்தி வைக்கிறார் இயக்குநர்.
ஹீரோ மிதுன் முதலில் காதலுக்காக மிருதுளாவை துரத்துவதும், மெல்ல மெல்ல தனது அப்பாவித்தனமான செயல்களால் அவரை ஈர்ப்பதுமாக மிளிர்கிறார். குறிப்பாக ஓடும் ட்ரெயினில் கிடைத்த இட்லியையே கேக்காக மாற்றி காதலியின் பிறந்தநாளை கொண்டாடுவது உண்மையான காதலில் உச்சம்.
நாயகி மிருதுளா கொழுக் மொழுக் என்று நமீதா இல்லாத குறையைப் போக்குகிறார். கவர்ச்சியில் அல்ல, நடிப்பில்… இவரும் கவர்ச்சி போட்டியில் இறங்கினால் ஒரு ரவுண்டு வருவது நிச்சயம்.
ஆதித்யா சேனலில் புகழ்பெற்ற காமெடி எபிசோடான ”கொஞ்சம் நடிங்க பாஸ்…” நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆதவன் மிதுனின் நண்பனாக வருகிறார். காமெடிக்கும் அவரே என்பதை அவர் அடிக்கு சில பஞ்ச்சுகளை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஹீரோவுக்கு நிகராக அவருக்கு காட்சிகள் இருந்தும் காமெடியில் ஏன் ஈர்க்கவில்லை என்பது அவருக்கே வெளிச்சம்!
ஒரு கொடூர வில்லனாக இருப்பாரோ என்று நினைக்க வைக்கும் அண்ணன் அனூப் அரவிந்த் கிளைமாக்ஸில் மிதுன் யார் என்கிற விபரம் தெரிய வந்ததும் அவருக்கு மட்டுமல்ல படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் செம ட்விட்ஸ் தான்.
ஓடுகிற ரயிலில் ஐந்து நிமிடம் படம்பிடிப்பதே பெரிய விஷயம். அப்படி இருக்கையில் ஒரு முழுப்படத்தையும் அதன் இயல்பு மாறாமல் படமாக்கித் தந்திருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.என்.ராஜேஷ்குமாருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
விஜய் பெஞ்சமினின் இசையில் பின்னணி இசை தடக் தடக் என்றால் பாடல்கள் மெல்லிசை.
ரயில் பயணங்களில் நடக்கும் சுவாரஷ்யங்களை படமாக பார்ப்பது என்பது அலாதியானது. அவ்வளவு சம்பவங்களை உற்று ரசிக்கலாம். அப்படி முழுப்படத்தையும் ஒரு ரயில் பயணக்கதையாக தந்ததோடு மட்டுமில்லாமல் அதில் ஒரு அழகான காதலையும் புகுத்தி டீசண்ட்டாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் என்.ராஜேஷ்குமார்.